2012ஆம் ஆண்டு வெளியான படம் 'சாட்டை'. இதில், இயக்குநர் சமுத்திரக்கனி பள்ளி ஆசிரியர் வேடத்தில் ரசிகர்களுக்கு பாடம் எடுத்திருப்பார். அரசுப் பள்ளிகளில் நடக்கும் அவலங்களை தோலுரித்துக் காட்டியப் படம். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. அரசுப் பள்ளிகளின் நிலை குறித்து பொதுமக்களிடையே பெரிய விவாதத்தையும் எழுப்பியது.
சாட்டை படத்தைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம், 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு 'அடுத்த சாட்டை' என்று பெயர் வைத்துள்ளனர்.
இப்படத்தில் கல்லூரி பேராசிரியராக சமுத்திரக்கனி நடித்துள்ளார். நடிகை அதுல்யா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய அன்பழகன், இப்படத்தை இயக்கியுள்ளார்.
டாக்டர் பிரபு திலக்கின் 11:11 புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், சமுத்திரக்கனியின் நாடோடிகள் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இளம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது. டீசரில், சமுத்திரக்கனி கல்லூரி பேராசிரியராக வருகிறார். இந்தப் படத்திலும் குடைச்சல் கொடுக்கும் கல்லூரி முதல்வராக தம்பி ராமையா வருகிறார்.
கல்லூரிகளில் எதற்கெடுத்தாலும் வசூலிக்கப்படும் அபராதம், மாணவர்கள் போராட்டம், மாணவிகளுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட தனியார் கல்லூரிகளில் நடக்கும் அவலங்களைச் சொல்கிறது இப்படம். அடுத்த சாட்டை படமும், சாட்டை படம் போல ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என்று டீசரில் நன்றாகத் தெரிகிறது.