விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான ’க/பெ.ரணசிங்கம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் தற்போது, அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீன தயாளன் இயக்கும், ’துக்ளக் தர்பார்’ படத்தில் நடித்துவருகிறார்.
7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இதில் நாயகியாக நடிகை அதிதி ராவ் ஹைதாரி நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அவர் இப்படத்திலிருந்து விலகிகொள்வதாக அறிவித்துள்ளார். மேலும் அவருக்கு பதில் இதில், ராஷி கண்ணா நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடிகை அதிதி ராவ் ஹைதராரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்திய திரைத்துறை கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டது. மீண்டும் தற்போது படப்பிடிப்பு தொடங்கப்பட்டு திரையுலகம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
நான் ஒரு நடிகையாக, யாரையும் காத்திருக்க வைக்க விரும்பவில்லை. தேதி பிரச்சனை காரணமாக ’துக்ளக் தர்பார்’ படத்திலிருந்து நான் விலகி கொள்கிறேன். நடிகை ராஷி கண்ணாவிற்கு வாழ்த்துகள். உங்கள் அனைவரையும் மிக விரைவில் தியேட்டரில் சந்திப்பேன். அதுவரை, பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:நிரந்தரமாக மூடப்பட்டதா தமிழ் ராக்கர்ஸ் வெப்சைட்?