’ஆணுக்கும் பெண்ணும் ஏற்படுவதுதான் காதல்’ என நம்பவைக்கப்பட்டிருக்கும் சமூகத்தில், ’காதலுக்கு பாலினம் இல்லை’ என்ற முழக்கத்தை பதிவு செய்வதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் பிரைட் மன்த் (pride month) ஆக அனுசரிக்கப்படுகிறது.
யாருக்காக இந்தக் கொண்டாட்டம்?
ஆண், பெண் ஆகிய இருபாலினங்களைத் தவிர பிற பாலினங்கள் இருப்பதையே சமூகம் சமீப காலங்களில்தான் அறிந்தும், புரிந்தும் வருகிறது. வரலாற்றில் ஆண், பெண் என்ற இரண்டு பாலினங்கள் மட்டுமே வரலாற்றில் இன்று வரை ஏற்கப்பட்டுள்ளன.
இப்படி, பிற பாலினத்தவர்களின் உடலியல் குறித்த தெளிவே சரியாக ஏற்படாத நிலையில், எல்ஜிபிடிக்யூ (LGBTQ) எனப்படும் பால்புதுமையினர் குறித்தும் புரிதல் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் இன்றைய சமூகத்தில் ஏற்பட்டுள்ளது.
நடிகை வரலட்சுமி ட்வீட்
இந்நிலையில், ஆண், பெண்ணுக்கு இடையேயான உணர்வைப் போல, இவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும், அதற்கான அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக நடிகை வரலட்சுமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், ”உங்கள் மனம் விரும்பும் யாரை வேண்டுமானாலும் காதலியுங்கள். காதலுக்கு கண்ணில்லை; நம்மை நாமே நேசிப்போம். நம்மை போலவே நம்மை சுற்றியிருப்பவர்களையும் அன்பு செய்வோம். அன்பை விதைப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.