தமிழில் 'காதலில் விழுந்தேன்' திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை சுனைனா, தொடர்ந்து 'நீர் பறவை', 'வம்சம்', உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும், நடிப்புத் திறன்மிக்கவர் என்று ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர். இவர் 'சில்லுக்கருப்பட்டி', 'ட்ரிப்' ஆகியப் படங்களில் இறுதியாக நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், சுனைனா மே மாதத் தொடக்கத்தில் கரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சைப் பெற்று வந்தார். சமீபத்தில் கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்தார்.
இந்நிலையில், தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் அவினாஷ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக சுனைனா தனது சமூக வலைத்தளப்பக்கமான ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, "சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற வீடியோக்களை நான் வெளியிட மாட்டேன். ஆனால், தற்போது ஒரு அவசர நிலை என்பதால் இதைப் பதிவு செய்கிறேன். ஒன்றரை மாதத்திற்கு முன்பு தயாரிப்பாளர் அவினாஷ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த அறுவை சிகிச்சைக்காக நிதியுதவி தேவைப்படுகிறது. இது மிகவும் அவசரம். உங்களால் முடிந்த சிறிய தொகையாக இருந்தாலும் தயவு செய்து உதவுங்கள். இந்த விவரங்களை உங்களால் முடிந்தவரைப் பகிருங்கள். இது பலருக்குச் சென்றடைய வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து நான் மீண்டுள்ளேன். கரோனா வைரஸ் விளையாட்டு அல்ல என்பது எனக்குத் தெரியும். தயவு செய்து அனைவரும் உதவுங்கள்" என்று கூறியுள்ளார்.