சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி, சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் 'சந்திரமுகி'.
இதையடுத்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அதுமட்டுமின்றி 'வேட்டையன்' கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
மேலும் சந்திரமுகியாக ஜோதிகாவுக்குப் பதிலாக, சிம்ரன் நடிக்க உள்ளதாகவும்; அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது.
இந்நிலையில் இச்செய்தி குறித்து நடிகை சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், " 'சந்திரமுகி 2' படத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு பொய்யான செய்தி. ஒரு தகவலை வெளியிடும் முன் பத்திரிகையாளர்கள், அது குறித்த உண்மைத் தன்மையை என்னிடம் கேட்டு அறிந்த பின்னர், வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம் சிம்ரன் 'சந்திரமுகி 2' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.