'அழகிய தமிழ் மகள்' சீரியல் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் ஷீலா ராஜ்குமார். அதன்பின் 'டூ லெட்', 'திரௌபதி' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ் படங்களில் மட்டுமல்லாது சமீபத்தில் சிறந்த படத்திற்கான கேரள அரசு விருதுபெற்ற 'கும்பளங்கி நைட்ஸ்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இது குறித்து நடிகை ஷீலா ராஜ்குமார் கூறுகையில், "மலையாளத்தில் கடந்த வருடம் நான் நடித்திருந்த 'கும்பளங்கி நைட்ஸ்' படம் மிகச்சிறந்த படமாக கேரள அரசின் விருது பெற்றுள்ளது.
ஒரு நல்ல படத்தில் நடித்த மகிழ்ச்சியை மீண்டும் உணர்கிறேன். 'டூ லெட்' படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டபோது, அதைப்பார்த்த மோகன்லால் மேனேஜர் மூலமாக எனக்கு மலையாளத்தில் ‘கும்பளங்கி நைட்ஸ்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது.
அதற்கு முன்பாகவே மலையாளத்தில் பிரபலமான சில நடிகைகளை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவைத்து ஆடிஷன் செய்துள்ளனர். ஆனாலும் திருப்தியாக அமையாத சமயத்தில்தான் என்னைத்தேடி அந்தக் கதாபாத்திரம் வந்தது.
ஆடிஷனில் கலந்துகொண்டபோது, முதல் நாளே நான் தேர்வாகிவிட்டேன். நான் அந்தப் படத்தில் நடித்தபோது எனக்கு இரண்டு காட்சிகளில் மட்டுமே வசனம் கொடுத்திருந்தார்கள். மற்றபடி பல காட்சிகளில் முகபாவங்களிலேயே எனது நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்துக்குப் பிறகு பெண்களை மையப்படுத்திய கதைகளாக எனக்குத் தேடி வர ஆரம்பித்தன.
தற்போது ஆறு படங்களில் நடித்துவருகிறேன். அதில் இரண்டு படங்கள் லாக் டவுன் சமயத்திற்கு முன்பே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது.
இன்னும் நான்கு படங்களின் படப்பிடிப்புகள் மீண்டும் ஆரம்பித்துள்ளன. ஒய் நாட் ஸ்டுடியோஸ், பாலாஜி மோகன் இணைந்து தயாரித்துள்ள 'மண்டேலா' என்கிற படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளேன்.
அதுமட்டுமல்ல, க்ரைம் த்ரில்லராக கதாநாயகியை மையப்படுத்தி உருவாகிவரும் 'வாஞ்சை' படத்திலும் நடித்துள்ளேன். 'இந்தியன் 2' படத்தில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றிவரும் சாய், தற்போது தயாரிக்கும் ஹாரர் படத்தில் நடிக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை கதையின் நாயகியாக மட்டுமே நடிப்பேன் என்ற பிடிவாதம் எல்லாம் என்னிடம் இல்லை. எனக்கு நன்றாக நடனம் ஆடத் தெரியும். கமர்ஷியல் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் இருக்கிறது.