சென்னை: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரம், கதாநாயகி வேடங்களில் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்த நடிகை ஷீலா கெளர், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.
குழந்தை நட்சத்திரமாக 'தளபதி' விஜய்யின் பூவே உனக்காக, 'தல' அஜித்தின் ரெட்டை ஜடை வயசு உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை ஷீலா. பின்னர் ஹீரோயினாக சீனா தானா, வேதா படங்களில் தோன்றிய இவர், டி. ராஜேந்தர் இயக்கிய வீராசாமி படத்தில் அவரது பாசமிகு தங்கையாக நடித்திருந்தார்.
Actress sheela kaur married chennai based business man தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்த இவர் இடையில் காணாமல் போனார். இதையடுத்து சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை நடிகை ஷீலா திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இவர் திருமண கோலத்தில், தனது மாப்பிள்ளையுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
மேலும், திருமண புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், 'எங்கள் இருவருக்கான சிறப்பு மிக்க நாள் இது. புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார். ஷீலாவின் கணவர் பெயர் சந்தோஷ் ரெட்டி.
'தல' அஜித் நடித்த 'ரெட்டை ஜடை வயசு' படத்தில், அவரது அக்கா மகளாகத் தோன்றியிருப்பார் ஷீலா. அதில், பல காட்சிகளில் ஷீலாவிடம் தன்னை கட்டிக்கொள்ளுமாறு அஜித் கேட்க, சிறு பெண்ணாக தோன்றும் இவர் 'கட்டிக்க மாட்டேன்' என்று அவரை கலாய்ப்பார்.
ஷீலா சினிமாக்களில் நடிப்பதற்கு முன் கங்கா யமுனா சரஸ்வதி உள்ளிட்ட டிவி சீரியல்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார். கடைசியாக 2018ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'ஹைபர்' என்ற படத்தில் நடித்திருந்தார், ஷீலா. அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்காத நிலையில், தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இதையும் படிங்க:
சுரேஷ் சந்திரா தங்கையின் மகள் திருமணம்: நேரில் சென்று வாழ்த்திய அஜித்