தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி எரித்துக்கொன்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நேற்று அம்மாநில காவல் துறையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.
தெலங்கானா காவல் துறையின் இந்த நடவடிக்கை நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த கொடும் குற்றம் புரிந்தவர்களுக்கு இந்த தண்டனையே தீர்வு என காவல் துறைக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே நடிகை சஞ்ஜனா கல்ராணி இந்த என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், 'முதலில் நமது காவல் துறையினருக்கு சல்யூட் செய்கிறேன். முதன்முறையாக ஒரு இந்தியப் பெண் என்பதை நினைத்து பெருமை அடைகிறேன். நமது நாட்டை மிகவும் நேசிக்கிறேன். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது இந்தியாவா என்று ஏளனமாகவும், அங்கே சாலையிலேயே பாலியல் அத்துமீறல்கள் அரங்கேறுமே எனவும் நகைப்பார்கள்.
நிர்பயா சம்பவம் நடந்த தருணத்தில் எனது இதயம் பதறிப்போனது. அந்த வழக்கில் இதுவரை நீதி கிடைக்கவில்லை. ஆனால் இன்றோ பாலியல் வன்முறையாளர்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். பெண்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்துவிடும் நபர்களுக்கு இந்த சம்பவம் ஒரு முன்னெச்சரிக்கையாக இருக்கும் என்று நம்புகிறேன். இன்றைய தினம் வரலாறு மாற்றி எழுதப்பட்டிருக்கிறது' என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க...
'லைகா' அதிபர் வாழ்க்கை வரலாறு: போட்டி போடும் இயக்குநர்கள்!