மக்களிடம் ஓடிடி தளங்கள் பிரபலமானதையடுத்து பல முன்னணி இயக்குநர்கள் படங்களைவிட வெப் சீரிஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
அந்த வகையில் சமீபத்தில் சமந்தா நடிப்பில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான வெப் சீரிஸ், 'தி ஃபேமிலி மேன்'. இயக்குநர்கள் ராஜ் - டிகே இணைந்து இயக்கிய இந்த சீரிஸில் இலங்கைத் தமிழர்கள் குறித்து சர்ச்சையைக் கிளப்பும் வகையில் இருப்பதாகக் கூறி அரசியல் கட்சியினர் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இருப்பினும் தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸிஸ் நடித்த சமந்தாவிற்குச் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.
இயக்குநர்கள் ராஜ் - டிகே மீண்டும் இணைந்து ஒரு புதிய வெப் சீரிஸை இயக்கிவருகின்றனர். இன்னும் பெயரிடாத இதில் ஷாஹித் கபூர், ராஷி கண்ணா, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துவருகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இந்த வெப் சீரிஸ் உருவாகிவருகிறது.
இந்நிலையில் இந்த வெப் சீரிஸில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் அவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்த அப்டேட் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய் சேதுபதிக்கு அவர் ஜோடியாக நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க:சர்ச்சை இயக்குநர்களின் புதிய வெப் சீரிஸ்: கைகோர்த்த மக்கள் செல்வன்!