மிகச் சிறிய வயதிலேயே நடிப்பு துறைக்குள் பலரும் நுழைகின்றனர். ஆனால் அவர்களில் எத்தனை பேர் வெற்றியடைகிறார்கள் என்றால் அது மிகப்பெரிய கேள்விக் கூறியே. அந்தவரிசையில் 14 வயதில் திரைத்துறைக்குள் நுழைந்த ரம்யா கிருஷ்ணன் தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளார்.
சிறுசிறு வேடங்களில் நடித்துவந்த ரம்யா கிருஷ்ணன், 'வெள்ளை மனசு' படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற அடுத்ததாக ரஜினிகாந்தின் 'படிக்காதவன்', கமல் ஹாசனுடன் 'பேர் சொல்லும் பிள்ளை' ஆகிய படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார்.
இதனையடுத்து அவர், ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான, 'படையப்பா' படத்தில் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்திருந்தார். ஸ்டைலாக திமிர் கலந்த பாணியில் பேசும் நீலாம்பரியை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் அமைந்தது.