கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த யுவராஜ் சுவாமி யாதவ். பிரபல ஜோதிடரான இவர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தலைவர்களின் பெயரில் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளார். பல்வேறு நபர்களுக்கு வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்தடுத்து இது தொடர்பாக புகார்கள் வந்தததைத் தொடர்ந்து ஜோதிடர் யுவராஜ் சுவாமி யாதவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, திரைப்பட நடிகையும், தயாரிப்பாளருமான ராதிகாவுக்கு ரூ.1.25 கோடி அவர் கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனடிப்படையில், ராதிகாவுக்கு மத்திய குற்றப் பிரிவு காவல்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கம் அளித்துள்ள ராதிகா குமாரசாமி, “என் தந்தையின் நண்பரான சாமியார் யுவராஜ், எங்கள் குடும்பத்துடன் 17 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்பில் இருந்துவருகிறார். அவர் என் குடும்ப ஜோதிடரும் கூட. இதனால் அவர் மீது எனக்கு மட்டுமின்றி எங்கள் குடும்பத்தினருக்கும் நல்ல மரியாதை உள்ளது.
நான் அவரிடமிருந்து பணம் பெற்றது உண்மை தான். அவர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதன் மூலமாக 'நாட்டிய ராணி சாந்தலா ' என்ற பெயரில் சரித்திரப் பின்னணிக்கொண்ட திரைப் படம் ஒன்றை எடுக்க திட்டமிட்டிருந்தார். அதனை நாங்கள் இணைந்து தயாரிக்க முடிவெடுத்திருந்தோம். நான் அவரது நிறுவனம் அல்லது என்னுடைய நிறுவனத்தின் கீழ் தயாரிக்க அறிவுறுத்தினேன்.