தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’பூ’ திரைப்படம் குறித்து நினைவுகூர்ந்த பார்வதி: மகிழ்ச்சியில் ரசிகர்கள் - பூ பார்வதி

சினிமா ரசிகர்களால் ’பூ’ திரைப்படமும், அப்படத்தில் பார்வதி ஏற்று நடித்த ’மாரி’ கதாபாத்திரமும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் , படம் வெளியாகி 12 ஆண்டுகள் கழித்து மாரி கதாபாத்திரம் குறித்து பார்வதி நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.

பார்வதி
பார்வதி

By

Published : Dec 5, 2020, 10:57 PM IST

தமிழில் 2008ஆம் ஆண்டு பார்வதி, ஸ்ரீகாந்த், இன்பநிலா ஆகியோர் நடிப்பில், சசி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ’பூ’. ச.தமிழ்செல்வனின் ’வெயிலோடு போய்’ எனும் சிறுகதையினைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், தமிழில் வெளிவந்த தனித்துவமான காதல் கதைகளில் ஒன்றாகும்.

கோலிவுட்டில் ஆண்களின் கண்ணோட்டத்திலேயே அதிகம் பதிவு செய்யப்பட்ட காதல் கதைகளுக்கு மத்தியில், ஒரு பூ மலரும் அழகோடு மாரியின் கண்ணோட்டத்தில் காதலைப் பதிவு செய்த இப்படமும், மாரியாக வாழ்ந்த பார்வதியும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றனர். தமிழ் சினிமா கண்ட சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இன்றளவும் விளங்கும் இப்படம், தமிழ்நாடு மாநில திரைப்பட விருது உள்பட பல விருதுகளை வென்றது.

மலையாள சினிமாவில் சிறந்த நடிகைகளுள் ஒருவராகத் திகழ்ந்த பார்வதி, தமிழில் அறிமுகமாகிய இப்படத்தின் வாயிலாகவே, ‘பூ பார்வதி’ என தமிழ் ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், மாரி கதாபாத்திரத்தின் புகைப்படம் ஒன்றை தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, ’பூ’ திரைப்படம் குறித்து பார்வதி நினைவுகூர்ந்துள்ளார்.

அதில், ”2008ஆம் ஆண்டு ’பூ’ படப்பிடிப்பு தளத்தில் மாரி கதாபாத்திரத்தின் ஆழத்தை எனக்கு புரிய வைக்க, நான் கேட்டபோதெல்லாம் இயக்குநர் சசி ’வெயிலோடு போய்’ சிறுகதையைப் படித்துக் காட்டியது எனக்கு இன்றளவும் நியாபகத்தில் உள்ளது. தமிழ்செல்வனின் இந்தச் சிறுகதையைத் தழுவி பூ திரைப்படம் உருவாக்கப்பட்டது.

நான் அப்போது அடிப்படை தமிழ் மட்டுமே தெரிந்து வைத்திருந்தேன், ஆனாலும் சசி ஒவ்வொரு முறையும் படித்துக் காட்டியது எனக்கு பெரும் உதவி செய்தது. அவர் கதையைப் படித்துக் காட்டிய விதம்தான் என்னை மாரியாக உணர வைத்தது. என் கற்பனையில் மாய உலகில் மலர்ந்தவள்தான் மாரி. இந்தப் புகைப்படத்தில் மாரியின் முகத்தில் நாம் காணும் பிரமிப்பும், அன்பும் அங்கிருந்தே வெளிப்பட்டது” என பதிவிட்டுள்ளார்.

சினிமா ரசிகர்களால் பூ திரைப்படமும், பார்வதியின் மாரி கதாபாத்திரமும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் படம் வெளியாகி 12 ஆண்டுகள் கழித்து, மாரி கதாபாத்திரம் குறித்து பார்வதி நினைவுகூர்ந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details