சென்னை: சில காரணங்களால் மும்பை சென்றிருந்த மீரா மிதுன் தற்போது சென்னை திரும்பியுள்ள நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்து பல விஷயங்களை பேசினார்.
சென்னை எழும்பூரில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் பத்திரிகையாளர்களை நடிகை மீரா மிதுன் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது சுஜித் இறப்புக்காக ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்திய பின் பேசினார்.
40 நாட்கள் நான் இங்கு இல்லை. என்னைப் பற்றி பல்வேறு தகவல்கள் வலைதளங்களில் உலா வருகின்றன. காவல் துறை நடவடிக்கைகள் எடுத்திருந்தால் நான் வேறு மாநிலத்துக்கு சென்று இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. இங்கு நியாயம் கிடைக்காமல் பெரிய இடத்துக்கு சென்றால்தான் கிடைக்கும் என்றால் அங்கு செல்வேன். ஆனால், அப்படி சென்றால் தமிழ்நாட்டிற்கு அசிங்கம்.
என் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இரண்டுமே பொய்யானவை. என்னிடம் எந்த விசாரணையும் செய்யாமல் வழக்கு பதிவு செய்தார்கள். லஞ்சம் வாங்கிக் கொண்டு, வழக்கு பதிவு செய்கிறார்கள். இங்கே சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது. இதற்கு காரணமான காவல் துறையினர், எனது அடுத்தகட்ட நடவடிக்கையால் நிச்சயமாக பணியில் இருந்து பணியிடைநீக்கம் செய்யப்படுவார்கள்.
விஜய் டிவி 'பிக் பாஸ்' நிகழ்ச்சி முடியும் வரை என்னை பயன்படுத்திக்கொண்டு, இப்போது எனக்கு முறையாக பதில் அளிக்கவில்லை. எனக்கு வரவேண்டிய முழுமையான தொகைவரவில்லை. சேரன் விவகாரத்தில் நான் இந்த நிகழ்ச்சி குறித்து மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கலாம். அப்படி அளித்து நிகழ்ச்சியை நிறுத்தினால்தான் எனக்கு கிடைக்கவேண்டியது கிடைக்கும் என நினைக்கிறேன்.