இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றியவர் ராம் மகேந்திரா. இவர் தற்போது ‘மனம்’ என்கிற குறும்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இதில் 'ஓகே கண்மணி' படத்தில் நடித்த லீலா சாம்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "மணிரத்னம் இயக்கத்தில் 'ஓகே கண்மணி' படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அதில் உதவி இயக்குநராக பணியாற்றியதன் மூலம் ராம் மகேந்திரா எனக்கு அறிமுகமானார். இந்த மனம் குறும்படத்தின் கதையை அவர் எப்போது உருவாக்கினார் என்பது தெரியாது. திடீரென ஒருநாள் என்னிடம் இதில் நடிக்க முடியுமா? என்று கேட்டார்.
அவர் படத்தின் கதையை கூறியதும், அந்த கருவும் எனக்கு பிடித்திருந்தது. மன்னிக்கும் மனம் வேண்டும், மற்றவர்களின் பிரச்னைகளைப் பற்றி புரிந்துகொள்ளவும் வேண்டும். இதுதான் இக்குறும்படம் சொல்ல வரும் செய்தி.
இந்த வாய்ப்பு என்னைத் தேடி வந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இது ஒரு பெரிய குறும்படமாக உருவாகுமா என்பது எனக்கு தெரியாது. சுமார் நாற்பது நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படம் கிட்டத்தட்ட பத்து நாள்கள் படப்பிடிப்பில் என் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினார்கள்.
யூ டியூப்பில் இக்குறும்படம் பதிவேற்றப்பட்ட முதல் நாளே 52 ஆயிரம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது. மேலும் தற்போதுவரை இரண்டு லட்சம் பேர் இந்தக் குறும்படத்தை பார்த்து ரசித்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.