சென்னை: தென்னிந்திய சினிமாக்களில் கதாநாயகியாக கலக்கிய நடிகை குஷ்பூவுக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலுள்ள ஹவாய் தீவுகளில் இயங்கி வரும் உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் நடிகை குஷ்பூவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்கு அவருக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள குஷ்பூ, அமெரிக்காவிலுள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இந்த கெளரவத்துக்கு பணிவுடன் கடமைப்பட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
1990களில் டாப் நடிகையாக வலம் வந்த குஷ்பூ தென்னிந்திய மொழிப் படங்களிலும், பாலிவுட் படங்களிலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
திரைப்படம் மட்டுமில்லாமல் டிவி சீரியல்கள், டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர் என பன்முகத்திறமையோடு வலம் வந்துள்ளார். திரைப்படத் தயாரிப்பாளராகவும் படங்களைத் தயாரித்த குஷ்பூ, தொடர்ந்து சினிமாக்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ’அண்ணாத்த’ படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்து வருகிறார்.