சென்னை: கோலிவுட் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான இயக்குநர் சுந்தர் சி - நடிகை குஷ்பூ தம்பதியினர் தங்களது இருபதாவது திருமண நாளை இன்று (மார்ச் 9) கொண்டாடியுள்ளனர்.
முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தபோதே இயக்குநர் சுந்தர் சி-யுடன் காதல் வயப்பட்ட நடிகை குஷ்பூ, 2000ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து அவர்களது இருபதாவது திருமண நாளான இன்று ரசிகர்களும், திரையுலகப் பிரபலங்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திருமண நாளை முன்னிட்டு தனது திருமண புகைப்படத்துடன் கணவரும், இயக்குநருமான சுந்தர் சி குறித்து ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார் குஷ்பூ.
அதில், 20 ஆண்டுகளாக எதுவும் மாறவில்லை. இன்றைக்கு வரையிலும் நான் பேசுவதை, சிரித்து முகத்துடனேயே கேட்டு வருகிறீர்கள். அநேகமாக தனது திருமணத்துக்கே தாமதமாக வந்த மாப்பிள்ளை இவராகத்தான் இருப்பார். எனது ஆற்றலின் தூணாக விளங்கும் உங்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள் என்று லவ், சிரிப்பு, ஃபேஸ் ஹக் ஸ்மைலிக்களோடு பதிவிட்டுள்ளார்.
திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் குஷ்பூ, அரசியலும் கலக்கிவருகிறார். தற்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்து வரும் இவர் அரசியில், சினிமா என இரண்டிலும் பங்காற்றி வருகிறார்.