நடிகை மேனகா - தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh), தமிழில் விக்ரம் பிரபுவுடன் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து, விஜய், சூர்யா, ரஜினி உள்ளிட்டோரின் படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் கீர்த்தி நடித்து வருகிறார். ’மகாநடி’ படத்துக்காக தேசிய விருது வென்ற கீர்த்தி, தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு படங்களிலும் முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், கீர்த்தி 'ரேவதி கலாமந்திர்' (Revathy Kalamandirr Production) என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் தற்போது 'வாஷி' (Vaashi) என்னும் படத்தை தயாரிக்கிறது. விஷ்ணு ஜி ராகவ் இயக்கும் இப்படத்தில், பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸுக்கு (Tovino Thomas) ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
மேலும் இப்படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷின் சகோதரியான ரேவதி சுரேஷ் (revathy suresh) திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். 'வாஷி' படத்தின் தயாரிப்புப் பணிகளை ரேவதி கவனித்துக் கொள்கிறார். வாஷி படத்தின் படப்பிடிப்பு பூஜை சமீபத்தில் நடைப்பெற்றது. இதில் கீர்த்தி சுரேஷ், அவரது பெற்றோர் மேனகா, சுரேஷ், சகோதரி ரேவதி உள்ளிட்டோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மூன்று நடிகர்களுக்குத் தங்கையான கீர்த்தி சுரேஷ்