தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பெண்களை மட்டம் தட்டுவதுபோல்தான் இந்த வருடம் பிக்பாஸ் இருந்தது' - நடிகை கஸ்தூரி பேச்சு!

நடிகர் விஜய் நடிக்க மட்டுமே செய்ய வேண்டும். அதையும் தாண்டி வேறெதுவும் பேசக்கூடாது என்று இயக்குநர் சாமி விரும்புவதைப்போல, அவரும் திரைப்படம் மட்டுமே இயக்க வேண்டும் என நடிகை கஸ்தூரி பேசியுள்ளார்.

தூத்துக்குடி விமானநிலையத்தில் நடிகை கஸ்தூரி பேட்டி

By

Published : Oct 12, 2019, 9:40 PM IST

தூத்துக்குடி: டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலி செல்லவிருந்த நடிகை கஸ்தூரி தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

நெல்லையில் நடைபெறும் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகை கஸ்தூரி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது,

'பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரம் கடற்கரையில் குப்பையைப் பெருக்கினார் என்பது பல்வேறு நபர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும். உற்சாகப்படுத்தியிருக்கும். குறிப்பாக வீடியோ எடுப்பவர்கள், குப்பையை நீக்கி அழகாக கடற்கரையை மாற்ற முயல்பவர்கள் என எல்லோரையுமே அவர் ஆர்வப்படுத்திருக்கிறார்.

இன்றைய சமூகத்தில் இரவு நேரத்தில் தனியாகப் பெண் பிள்ளைகளை கடைகளுக்குக் கூட அனுப்ப முடியாத சூழ்நிலைகள் உள்ளன.

நகர மயமாதல், இடம் பெயர்தல் உள்பட பல விஷயங்களால் சாப்பாடு வேண்டுமென்றால் கூட, தமிழகத்தில் இந்தியில்தான் கேட்க வேண்டும் என்ற நிலைமைக்குத் தமிழ்நாடு மாறிவிட்டது. இது மனதை உறுத்திக் கொண்டிருக்கிறது.

பெண்கள் பாதுகாப்புக்கு மிக அதிக முயற்சிகள் எடுக்க வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். அதற்கென்று தனியாக மாநில பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

'பிக் பாஸ்' நிகழ்ச்சி என்பது சமூக பொறுப்பான நிகழ்ச்சி கிடையாது. அதில் பங்கேற்றவர்கள் முழுவதுமே சினிமா, நாடகக் கலைஞர்கள், பிரபலங்கள் மட்டுமே. டிவி நிகழ்ச்சி என்பது பொறுப்புள்ள பொழுதுபோக்காக இருக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

மக்களை ஒரு சிறிய வட்டத்துக்குள்ளாகவே சிக்க வைக்கும் நோக்குடன் 'பிக் பாஸ்' போன்ற நிகழ்ச்சிகளின் போக்கு உள்ளது. தவறான விஷயங்களை சொல்வதினால் மட்டுமே இங்கு பிரபலம் ஆகிறது என்று கலைஞர்கள் நினைத்தால், அது உண்மையில் தவறான ஒன்று.

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் நடிகர் கமல் பேச்சளவில் அவருக்கு ஒதுக்கப்பட்ட விஷயங்களைப் பேசுகிறார். இனி வரும் நிகழ்ச்சிகள் பொழுதுபோக்குடன் சேர்ந்து, பொறுப்பாகவும் இருக்க வேண்டும்.

பெண்களுடைய மதிப்பைக் குறைத்து மதிப்பிடும் நிகழ்ச்சியாகதான், இந்த வருட 'பிக் பாஸ்' நிகழ்ச்சி அமைந்து விட்டது என்பதே என்னுடைய வருத்தம்.

இயக்குநர் சாமியின் சினிமா படங்களுக்கு நான் ஒரு நல்ல ரசிகை. நடிகர் விஜய் நடிக்க மட்டுமே செய்ய வேண்டும், அதையும் தாண்டி வேறெதுவும் பேசக்கூடாது என்று இயக்குநர் சாமி விரும்புவதைப்போல, அவரும் திரைப்படம் மட்டுமே இயக்க வேண்டும். அதைத்தாண்டி வேறு எதுவும் பேசக்கூடாது என சொல்லலாம்.

யார் வேண்டுமானாலும் எந்தக் கருத்தை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆகவே அது குறித்து பேசுவது என்பது தேவையற்றது என நினைக்கிறேன்.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் எந்த தலைவருக்கு சினிமாவோடு சம்பந்தமில்லை என்று சொல்லமுடியும். சினிமாவில் ஏதோ ஒரு வகையில் தொடர்பு உடையவர்கள்தான் இன்றைய அரசியலிலும் இருக்கிறார்கள். ஆகவே, இதில் ஒரு பெரிய முரணை நான் பார்க்கவில்லை.

நடிகர் விஜய் குறித்து இயக்குநர் சாமி பேசியதற்கு நடிகை கஸ்தூரி கண்டனம்

எந்த இடத்தில் நல்ல பொறுப்புள்ள மனிதர்கள் இருந்தாலும்; அந்த இடத்தில் நாம் நம் தலைவரைத் தேர்ந்தெடுப்பது தவறில்லை என்பதே எனது கருத்து.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க:

ஹீ இஸ் தி பிரைட் ஆஃப் நேஷன் - பிகிலின் வெறித்தன ஆட்டம்!

ABOUT THE AUTHOR

...view details