பேரரசு இயக்கத்தில் பரத் நடித்திருந்த 'பழனி' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். தொடர்ந்து 'சரோஜா', 'நான் மகான் அல்ல', 'மாற்றான்', 'துப்பாக்கி', 'மெர்சல்', 'கோமாளி' உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள 'மேடம் டுஸ்ஸாட்ஸ்' அருங்காட்சியகத்தில் காஜல் அகர்வாலின் மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா சிங்கப்பூரில் இன்று நடைபெற உள்ளது.
இதில் காஜல் அகர்வால் கலந்துகொண்டு தனது சிலையை திறந்து வைக்கிறார். இந்த அருங்காட்சியகத்தில் பல துறைகளில் உலகப் புகழ் பெற்றவர்களின் மெழுகு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, ராணி எலிசபெத், ஒபாமா, சச்சின் டெண்டுல்கர், ஜாக்கிசான், அமிதாப்பச்சன், ஷாருக்கான், கஜோல், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
தென்னிந்தியாவில் நடிகர் பிரபாஸ், மகேஷ் பாபு போன்றவர்களுக்கு பிறகு, காஜல் அகர்வால் மூன்றாவது நடிகையாகவும், முதல் தென்னக நடிகையாகவும் இந்த கௌரவத்தை பெறுகிறார். சில மாதங்களுக்கு முன் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இங்கு மெழுகு சிலை அமைத்திருந்தனர்.