சென்னை: தல அஜித்தின் வலிமை படத்துக்காக பைக் ஓட்டும் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் நடிகை ஹூமா குரேஷி அதன் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் வலிமை படத்தில் அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் ஏராளமாக இடம்பெறவுள்ளது. படத்தில் தல அஜித்துடன் இணைந்து காலா பட நாயகி ஹூமா குரேஷி முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதையடுத்து படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்திலும் ஹூமா குரேஷி தோன்றவிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதிரடி ஸ்டண்ட்களிலும் அவர் ஈடுபடவுள்ளாராம். இதனால் ஸ்டண்ட் தொடர்பான பயிற்சிகளை அவர் தற்போது மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக பைக் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அவர், அதன் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். "பயத்தை புறம்தள்ளிவிட்டு ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதுதான் வாழ்க்கை" என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர் சீரிஸ் படங்களின் மூலம் அறிமுகமான நடிகை ஹூமா குரேஷி, தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் அவரது காதலியாகத் தோன்றி ரசிகர்களின் மனம் கவர்ந்தார். இதைத்தொடரந்து தற்போது தல அஜித் படத்தில் கமிட்டாகியுள்ளார்.
வலிமை படத்தில் தல அஜித்துடன், ஹூமா குரேஷி, யோகி பாபு, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியார் பிரதான கேரக்டர்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு இசை - யுவன் ஷங்கர் ராஜா. ஒளிப்பதிவு - நிரவ் ஷா. பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.
தல அஜித் - இயக்குநர் எச் வினோத் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இதையடுத்து விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பு நடைபெற இருந்த நிலையில் கரோனா தொற்று பீதி காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.