தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான '96' படத்தின் குட்டி ஜானுவாக ரசிகர்களுக்கு அறிமுகமானவர், நடிகை கெளரி கிஷன். இந்தப்படத்தையடுத்து கெளரி விஜய்யின் 'மாஸ்டர்', தனுஷின் 'கர்ணன்' உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார்.
சென்னை கே.கே. நகரில் உள்ள பத்மசேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் ராஜகோபால் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதையடுத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திவருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகை கெளரி கிஷன் தனது ட்விட்டர் பக்கத்தில், "பள்ளிக்காலங்களில் என்னைப் போன்று பல மாணவிகளும் இது போன்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களால் வேதனை அடைந்துள்ளனர். பள்ளிகள் உங்களை வளர்த்தெடுக்கும் தளமாக இருக்கவேண்டுமே தவிர, நீங்கள் முத்திரை குத்தப்படுவீர்களோ என்ற பயத்தை விதைக்கக் கூடாது.
சமீபத்தில் பிஎஸ்பிபி பள்ளியில் மாணவர்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் போன்று அடையாறில் உள்ள பள்ளியில் நான் படித்துக்கொண்டிருந்தபோது எனக்கும் நடந்துள்ளது. அதை நான் முன்வைக்க விரும்புகிறேன். என்னுடைய நண்பர்களிடம் பேசும்போது அவர்களும் இது போன்ற நெருக்கடிகளை எதிர்கொண்டிருப்பதை அறிந்தேன்.
அதில், தவறாகப் பேசுவது, சாதிக்கொடுமை, உடலை வைத்து அசிங்கப்படுத்துவது, ஆதாரங்கள் இல்லாமல் மாணவர்கள் மீது பழிசுமத்துவது உள்ளிட்ட பல விஷயங்கள் அடங்கும். அவற்றை இப்போது நினைத்தால்கூட எனது நெஞ்சம் பாரமாகிறது. இது போன்ற கொடுமைகளை எதிர் கொண்டவர்கள், அதனை பொதுவெளியில் கொண்டு வரவேண்டும். அதன் மூலம் வருங்கால மாணவிகளுக்கு இது போன்ற கொடுமைகள் நடக்காமல் நாம் தவிர்க்க முடியும்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'உறங்க முடியவில்லை' பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் குறித்து அஸ்வின் ட்வீட்!