சிம்பு நடிப்பில் 2004இல் வெளியான குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திவ்யா ஸ்பந்தனா. தொடர்ந்து கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அபி என்ற கன்னட திரைப்படம் மூலம் திரையுலக பயணத்தை தொடங்கிய இவர், கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும், இவர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பதோடு, கர்நாடக மாநிலத்தில் இருந்து ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தீவிர அரசியலில் ஈடுபட்டுவந்த ஸ்பந்தனா, 2011க்குப் பிறகு ஒரிரு படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.
இதனிடையே, திவ்யா தற்போது முழுநேர அரசியலில் இருந்து விலகி மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த இருப்பதாக கன்னட திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபகாலமாக அரசியலில் இருந்து அவர் விலகி இருப்பதாகவும், வெள்ளித்திரையில் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.