கடந்த 1980ஆம் ஆண்டு டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'மைதிலி என்னை காதலி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து இவர் நடித்த படங்கள் மாபெரும் வெற்றியடைந்தன.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மட்டுமல்லாமல் பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்ற இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்பு திரையுலகை விட்டு விலகியிருந்த, நடிகை அமலா சமூகச் செயற்பாடுகளில் ஆர்வமாகப் பங்காற்றி வந்தார். தற்போது இவர் ஹைதராபாத் ப்ளூ கிராஸின் இணை இயக்குநராக இருக்கிறார்.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் நடிகை அமலா. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'பல ஆண்டுகளுக்குப் பிறகு ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் தமிழில் திரைப்பயணத்தைத் தொடங்குகிறேன். ஒரு நடிகர் பல உயிர்களால் ஆசிர்வதிக்கப்படுகிறார். நான் அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு திரும்பி வந்துள்ளேன். இது மிகப் பெரிய அதிர்ஷ்டம்' எனப் பதிவிட்டிருந்தார்.
இதுதொடர்பாக படக்குழுவினர் கூறுகையில், ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை அமலா ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் சர்வானந்த், ரிது வர்மா, நாசர், சதிஷ், ரமேஷ் திலக் எனப் பலரும் நடிக்கிறார்கள். நட்பு, காதல் இடையே உள்ள பிரிக்கமுடியாத உறவை பிரதிபலிக்கிற கதையாக இது இருக்கும் என்று படக் குழுவினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ரசிகர்களுக்கு ஒரு செய்தி; யாரும் கவலைப்படாதீங்க ஹீரோ கண்டிப்பா வரும்!