சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்குக் கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.
இந்த நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு அக்டோபரில் முடிவடைந்த நிலையில், செயற்குழு ஒப்புதலுடன் பதவிக்காலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் 2019ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. நடிகர் விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், ஐசரி கணேஷ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டனர்.
பாண்டவர் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிட்டனர். துணைத் தலைவர்கள் பதவிக்கு இந்த அணியின் சார்பில் பூச்சி முருகனும் நடிகர் கருணாஸும் போட்டியிட்டனர். சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு கே. பாக்யராஜூம் பொதுச் செயலர் பதவிக்கு ஐசரி கணேஷூம் பொருளாளர் பதவிக்கு நடிகர் பிரசாந்த்தும் போட்டியிட்டனர். துணைத் தலைவர் பதவிகளுக்குக் குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிட்டனர்.
தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற நீதிபதி!
தபால் ஓட்டுகளையும் சேர்த்து வாக்களிக்கத் தகுதியுள்ள 3173 பேரில் 1604 பேர் ஓட்டுப் போட்டனர். இந்நிலையில் பதவிக்காலம் முடிந்த ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாபனைத் தேர்தல் அலுவலராக நியமித்துத் தேர்தலை அறிவித்துள்ளது சட்டவிரோதமானது என்றும், சங்க உறுப்பினர்கள் பலர் நீக்கப்பட்டுள்ளதால், முறையான வாக்காளர் பட்டியலைத் தயாரித்து நியாயமாகத் தேர்தல் நடத்தக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் நடிகர் ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
மேலும் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 61 உறுப்பினர்கள் அளித்தப் புகாரின் அடிப்படையில், நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்தி வைக்க மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்தும், தேர்தலை நடத்த பாதுகாப்புக்கோரியும் பொதுச் செயலாளர் என்ற முறையில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்குகளில் பதிவாளர் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தும், தேர்தலை நடத்தவும் அனுமதித்த நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டது. அதன்படி, திட்டமிட்டப்படி 2019, ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, வாக்கு எண்ணிக்கை நடத்தப்படாமல், வாக்குப்பெட்டிகள் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளன.