உலகம் முழுவதும் பெறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு துறைகள் நலிவடைந்துள்ளன. அதிலும் குறிப்பாக சினிமா படப்பிடிப்பு இல்லாத காரணத்தினால், திரைப்பட தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி வழங்கிய யோகிபாபு - தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவிய யோகிபாபு
சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஆயிரத்து 250 கிலோ அரிசியை நடிகர் யோகிபாபு வழங்கினார்.
ஃபெப்சி உறுப்பினர்களுக்கு திரைப்பட பிரபலங்கள் பலர் உதவ முன்வரவேண்டும் என ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்தார். அக்கோரிக்கையை ஏற்று தமிழ்த் திரையுலகின் நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் எனப் பலரும் சேர்ந்து 2 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதியும், 2,400 மூட்டைகள் அரிசியும் நன்கொடையாக தற்போது வரை வழங்கியுள்ளனர்.
இதற்கிடையில், நகைச்சுவை நடிகர் யோகிபாபு தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடக நடிகர்கள், தினசரி நடிகர்களுக்கு ஆயிரத்து 250 கிலோ அரிசி வழங்கியுள்ளார். ஒருசிலருக்கு தன் கைகளாலேயே வழங்கிய அவர், மீதமுள்ள அரிசி மூட்டைகளை கஷ்டப்படும் மற்ற நடிகர்களுக்கு விநியோகிக்கும் படி கூறியுள்ளார்.