தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'குற்றப்பரம்பரை' இனி எவருக்காகவும் காத்திருக்காது - வேல ராமமூர்த்தி பேட்டி - குற்றப்பரம்பரை எழுத்தாளர்

'குற்றப்பரம்பரை' கதை திரை வடிவமாக உருவாக்கம் பெற்று வருவது தொடங்கி, 'நம்ம வீட்டுப்பிள்ளை' படத்தில் ஏற்று நடித்து வரும் முக்கிய கதாபாத்திரம் வரை தனது சினிமா வாழ்க்கை குறித்து பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி விவரிக்கிறார்.

நடிகர், கதாசிரியர் வேல ராமமூர்த்தி

By

Published : Aug 30, 2019, 1:01 PM IST

தமிழ் சினிமாவில் கதாசிரியர்கள் குறைவாக உள்ளது இதுகுறித்து?

அது உண்மைதான். தமிழ் சினிமாவில் மட்டும்தான் இப்படி இருக்கிறது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மொழிப்படங்களில் ரைட்டர்ஸ் என்று தனியாகவே இருப்பார்கள் .என்ன காரணத்தினால் தமிழ் சினிமாவில் இன்றைக்கு எழுத்தாளர்கள் இல்லை என்பது தெரியவில்லை.

கலைக்கும் இலக்கியத்துக்கும் ஒரு பெரிய இடைவெளி உண்டாகியிருக்கிறது. எழுத்தாளர்களும், சினிமாவுக்கு என்று சில விஷயங்களை விட்டுக் கொடுத்துப் போக வேண்டும். உலகம் முழுவதும் வெற்றி பெற்ற 'பாகுபலி' படத்தின் வெற்றிக்கு காரணம் ராஜமெளலியின் தந்தை ஒரு கதாசிரியர். அதேபோன்று தமிழ்நாட்டிலும் ஒரு மாற்றம் வரும் என்று எண்ணுகிறேன்.

'மையூரன்' படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது?

இல்லை படத்தில் கதாநாயகன் மற்றும் கதாநாயகிகள் இருக்கிறார்கள். எனக்கு ஒரு முக்கியமான பாத்திரம்

உங்களுடைய நடிப்புக்கு என்று நீங்கள் எவ்வளவு மார்க் தருவீர்கள். உங்களுடைய நடிப்பை இன்னும் மேன்மைப்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறீர்களா?

பள்ளிகளில் படிக்கும் காலத்தில் நூற்றுக்கு 35 மார்க் எடுத்தால் பாஸ். நான் நடிப்பில் 35 மார்க் உறுதியாக பெற்றுவிட்டேன். 'மதயானைக்கூட்டம்' படத்தில் என்னுடைய கதாபாத்திரமான வீரத்தேவன் பெரிதும் பேசப்பட்டது. முதல் படமே நேஷனல் அவார்ட் இறுதிசுற்று வரைக்கும் சென்றது. விருதுக்குழுவில் எனக்குதான் விருது என்று கூறினார்கள். அந்த அளவுக்கு என கேரக்டர் பாராட்டைப் பெற்றது.

இந்தப் படத்துக்கு பின்னர் 'கிடாரி' படத்தில் கொம்பையா கதாபாத்திரம், நான் நினைத்து நினைத்து மகிழ்ச்சி அடையும் கதாபாத்திரம்.

'சேதுபதி' படத்தில் எனக்கு 'ராஜா' என்ற பாடல் அமைத்திருந்தார்கள். சுசீந்திரன் இயக்கத்தில் 'பாயும் புலி' அப்பா கதாபாத்திரம், 'மணமகள்' படத்தில் காட்டுவாசி தலைவனாக, 'துப்பாக்கி முனை' உள்ளிட்ட படங்களை நான் திரும்பிப் பார்க்கையில், 35இல் இருந்து 65 மார்க்கை நடிப்பில் கடந்து விட்டேன் என்று நான் நினைக்கிறேன்.

நீங்கள் கதை எழுதுவதற்கு உங்கள் புத்திக்கூர்மையும் அனுபவமும் முதலீடாக உள்ளது. நீங்கள் நடிப்பதற்கு உங்கள் உடம்பு தான் மூலதனம் என்று கூறலாமா?

எனது உடம்பை நான் சினிமாவுக்காக தயார் படுத்தவில்லை. எனக்கு இயல்பாக அமைந்தது. அதுமட்டுமின்றி கிராமத்து உணவு வகைகளை உண்டு வளர்ந்துள்ளேன். நான் சாப்பிட்ட உணவு வகைகளை நீங்கள் சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள்.

இயற்கை உரங்கள் போட்டு விளைவிக்கப்பட்ட நெல்லையும், கம்பையும், பருத்தியையும் உண்டவன் நான். பருத்திக் காய், தட்டாங்காய், இலந்தைப்பழம் வேப்பம்பழம் என நான் உட்பட என்னுடன் இருப்பவர்கள் தின்னாத பழங்கள் இல்லை. கீரை வகைகளும் இல்லை.

ஊருக்கு பக்கத்திலேயே கடல் இருக்கிறது என்பதால் வாரத்தில் 4 நாட்களுக்கு மீன் உண்போம். ஒரு முழு கிடாய் கறி வெட்டி தின்ற ஆட்கள் நாங்கள்.

எனக்கு இப்பொழுது 67 வயதாகிறது அனாசின், சாரிடான் தவிர எனக்கு வேறு எந்த மாத்திரை, மருந்து பெயரும் தெரியாது. இதுவரை நான் ஊசி போட்டதில்லை. மருந்து குடித்ததில்லை.

இப்போதும் எனக்கு உடல் உபாதைகள் வந்தால் நானே அதை சரி செய்து விடுவேன். இதற்கெல்லாம் நம் மனசுதான் காரணம். உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பேன். அதுமட்டுமல்லாமல் நான் ராணுவத்தில் இருந்தவன். ராணுவ பயிற்சி எடுத்துள்ளேன். ராணுவத்திலிருந்து விடுபட்டு 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தும் என் உடலை அப்படியே பராமரித்து வருகிறேன். ராணுவ பயிற்சியில் உடல் மட்டுமல்ல, மனதையும் தயார்படுத்தி அனுப்பினார்கள்.

நடிப்பதற்காக இந்த உடம்பை தயார்படுத்தவில்லை. 'மதயானை கூட்டம்' படத்தில் நடிக்க மாட்டேன் என்றேன். கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார்கள். தொடர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தது. அதனால் நடித்துக்கொண்டிருக்கிறேன்.

'குற்றப்பரம்பரை' படத்தை எப்போது திரையில் பார்க்கலாம்...

'குற்றப்பரம்பரை' கூடிய விரைவில் உலக மக்களுக்கு காட்சி வடிவில் வரவிருக்கிறது. யார் நடிப்பார்கள், யார் இயக்குவார்கள் என்பது குறித்து இப்பொழுது விடை இல்லை. இனி எவருக்காகவும் எனது குற்றப்பரம்பரை காத்திருக்காது. அதற்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது. பெரிய அளவில் மிக பிரமாண்டமான அளவில் நடந்து வருகிறது. பெரிய அளவில் இந்த படம் வெளிவரும்.

'குற்றப்பரம்பரை' இனி எவருக்காகவும் காத்திருக்காது - வேல ராமமூர்த்தி பேட்டி
சினிமாவின் போக்கு உங்கள் பார்வையில் எப்படி உள்ளது?ஒரு எழுத்தாளன், நடிகன், ஒரு மனுஷன் என்ற பார்வையில் பார்க்கும் பொழுது தமிழ் சினிமா சினிமாவாக இல்லை. மலையாள சினிமா, வங்காள சினிமா, ஈரானிய சினிமா என அனைவரும் கவிதையாக படம் எடுக்கின்றனர். அவர்கள் நாட்டின் அடையாளங்களை வைத்து படம் எடுக்கிறார்கள். நாம் தமிழ் சினிமாவில் இவைகளை துறந்துவிட்டு படம் எடுக்கிறோம்.

தமிழ்ப் படங்களில் அணியும் உடை, காட்டப்படுகின்ற காதல், வாழ்க்கை போன்றவையெலலாம் நமக்கானது அல்ல. உலக அளவில் தமிழன்தான் பொய்முகம் தரித்துக் கொள்வதில் முதலிடத்தில் உள்ளான். இதைச் சொல்வது மிகவும் கஷ்டமான விஷயம்தான். இருந்தாலும் சில முயற்சிகளும் நடந்துகொண்டிருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள் போன்ற படங்களை உதாரணத்துக்கு கூறலாம். தமிழ் அடையாளங்களை கூறும் படங்கள் தமிழ் சினிமாவில் வரவேண்டும்.

ஒரு கதாசிரியராக தமிழ் சினிமாவில் வந்தேன் என்றால் தமிழ் வாழ்க்கையைத்தான் கதையாக கொடுப்பேன். நான் இயக்குநராக வந்தேன் என்றால் அசலான ஒரு தமிழ் வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்ட கதையை இயக்குவேன்.

'நம்ம வீட்டுப்பிள்ளை' படத்தில் உங்களுக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம்

'நம்ம வீட்டுப்பிள்ளை' படத்தில் ஒரு பெரிய கதாபாத்திரம். பெரிய நட்சத்திரம் கூட்டம் உள்ள பெரிய படம் அது. சிவகார்த்திகேயன், பாரதிராஜா, சமுத்திரகனி, சூரி நடிச்சிருக்காங்க.

இயக்குநர் பாரதிராஜாவுக்கு நான் மகனாக நடித்துள்ளேன். என்னுடைய கதாபாத்திரம் மிக நன்றாக வந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப் படம் எனக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும்.

ABOUT THE AUTHOR

...view details