நடிகர் விக்ரம் தற்போது 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் கோப்ரா படத்தின் படப்பிடிப்புப் பணிகள் கரோனா ஊரடங்கு முடிவடைந்ததும் தொடங்கவுள்ளன.
இதனிடையே நடிகர் விக்ரமின் அடுத்த படமான 60ஆவது படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் நிலவிவந்த நிலையில், தனது 60ஆவது படத்தில் தன் மகன் துருவ் விக்ரமுடன் அவர் இணைந்து நடிக்கவுள்ளதாகவும், கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள படக்குழுவினர், ”பீட்சா தொடங்கி தற்போது முடிவடைந்துள்ள 'ஜகமே தந்திரம்' வரை கார்த்திக் சுப்புராஜின் ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைகளங்கள் உடையவை. அந்த வகையில் 'சீயான் 60' படமும் வித்தியாசமான கதைக்களமாகவும் ரசிகர்களுக்கு விருந்தாகவும் அமையும்” என நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.