ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள 'நான் சிரித்தால்' திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. ட்ரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து படக்குழுவுக்கு பல தரப்பினரிடமிருந்தும் வாழ்த்துகள் அள்ளியது. இதைத்தொடர்ந்து ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
இப்படத்தை இயக்கிய ராணா ஜகதீசா சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அப்பதிவில் நடிகர் விஜய் 'நான் சிரித்தால்' ட்ரெய்லரை பார்த்துவிட்டு தனக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், இதனால் தான் மிகவும் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் பதிவிட்டிருந்தார். இது தனக்கு கிடைத்த நல்ல செய்தி எனவும் தெரிவித்திருந்தார்.
இத்திரைப்படம் 'கெக்க பிக்க' என்னும் காமெடி குறும்படத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும். குறும்படத்தை இயக்கிய ராணாவே அக்கதை கருவை மையமாக வைத்து 'நான் சிரித்தால்' படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் சூடோபல்பர் அஃபெக்ட் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள ஐ.டி பட்டதாரியான ஆதிக்கு எந்த உணர்ச்சி வந்தாலும் சிரிக்க மட்டுமே செய்யமுடியும்.
இந்தக் குறைபாட்டால் கோபம், கவலை என எந்த உணர்ச்சி வந்தாலும் சிரித்து மாட்டிக்கொள்ளும் நிலைமைக்கு ஆளாகிறார் ஆதி. இதனால் அவர் என்னென்ன பிரச்னைகளை சந்திக்கிறார் என்பதை குறித்த கதையில் ஐஸ்லர்யா மேனன், இயக்குநர் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: கார்த்திக் சுப்பராஜ்- தனுஷ் கூட்டணி படத்திற்கான பெயர் இதுதான்!