மலையாளத்தில் 2013 டிசம்பர் 19 அன்று, ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மோகன்லாலுடன் மீனா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர். அப்போது, இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இதே கூட்டணி 'த்ரிஷ்யம் 2' படத்திலும் இணைந்தது.
கரோனா அச்சம் காரணமாக, திரையரங்கு வெளியீட்டைத் தவிர்த்து ஓடிடி தளமான அமேசான் பிரைமில் 'த்ரிஷ்யம் 2', பிப்ரவரி 19ஆம் தேதி வெளியானது. மலையாளத்தில் மெகா ஸ்டார் நடிகரின் படம் நேரடியாக டிஜிட்டல் தளமான ஓடிடியில் வெளியானது என்ற பெருமையை த்ரிஷ்யம் 2 பெற்றது.
முதல் பாகத்தின் முடிவிலிருந்து இரண்டாம் பாகத்தை இயக்குநர் தொடங்கினார். இதனால், 'த்ரிஷ்யம் 2' படம் சமூக வலைதளங்களில் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. சமூக வலைதளங்களில் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் படத்தின் கதை, திரைக்கதை குறித்து சிலிர்ப்புடன் பகிர்ந்தனர்.