பிரபல நடிகர் தாடி பாலாஜி, தன்னையும் தனது மனைவியான நித்தியாவையும் காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் என்பவர் திட்டமிட்டுப் பிரித்துவருவதாக கடந்த ஆண்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த 13ஆம் தேதி உதவி ஆய்வாளர் மனோஜ் குமார், நடிகர் தாடி பாலாஜி ஆகிய இருவரும் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் அதிவீரபாண்டியன் முன்னிலையில் விசாரணைக்கு முன்னிலையாகினர்.
அப்போது, உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் தன்னை நாக்கை சுருட்டியும், விரலைக் காட்டியும் மிரட்டியதாக தாடி பாலாஜி கூறினார்.
இதையடுத்து உதவி ஆய்வாளரின் இந்தச் செய்கைக்கு நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தாடி பாலாஜி நேற்று (ஆக. 26) புகார் அளித்தார்.
உதவி ஆய்வாளர் மீது நடிகர் தாடி பாலாஜி புகார் இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி உதவி ஆய்வாளர் மனோஜ் குமார், தன்னை மிரட்டுவதாகவும், துணை ஆணையர் விசாரணையின்போதே தன்னை விரலைக் காட்டியும், நாக்கை துருத்தியும் மிரட்டியதாகவும் கூறினார்.
மேலும், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தனது பணியைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் எனவும், யாருக்கும் அஞ்சமாட்டேன் எனவும் கூறியதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளேன். எனவே உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலைச் சந்தித்துப் புகார் அளித்ததாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'சூரரைப் போற்று' ஓடிடி தளத்தில் வெளியாவது இரக்கமற்ற செயல் - விநியோகஸ்தர்கள் சங்கம் கண்டனம்