தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நாம் மற்றவர்களுக்கு பயனுள்ளவர்களாக இருந்தால் நம் வாழ்க்கை முழுமை பெறும் - சூர்யா - சூர்யா

அகரம் அறக்கட்டளை தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைந்த விழா நேற்று நடைபெற்றது.

மீண்டும் பள்ளிக்கு செல்லுங்கள்: மேடையில் கண் கலங்கிய சூர்யா
மீண்டும் பள்ளிக்கு செல்லுங்கள்: மேடையில் கண் கலங்கிய சூர்யா

By

Published : Jan 27, 2020, 4:45 PM IST

அகரம் அறக்கட்டளை தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி நேற்று சென்னை, சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா கல்லூரியில் 'தடம் விதைகளின் பயணம்' என்ற பெயரில் விழா நடைபெற்றது. இதில் சிவக்குமார், அகரம் அறக்கட்டளை நிறுவனர் நடிகர் சூர்யா, கார்த்தி, சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் மரியஜீனா ஜான்சன் மற்றும் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.


விழாவில் நடிகர் சிவக்குமார் பேசுகையில், 'அகரத்தின் பயணம் பல நூறு ஆண்டுகள் செல்லவேண்டும். இன்றைய மாணவர்களுக்கு உதவ அகரம் அறக்கட்டளை இருக்கிறது. ஆனால் என் காலத்தில் கல்வியுதவி செய்ய யாருமில்லை. நானும் உங்களைப் போல்தான். நான் பிறந்த ஒரு வருடத்தில் என் தந்தையை இழந்தேன். சிறுவயதில் சகோதரன், சகோதரியை இழந்தேன். பஞ்சம் மிகுந்த அந்த காலகட்டத்திலும் என் தாயின் அரவணைப்பால் ஊக்குவிப்பால் இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன். நான் இருந்ததால்தான் இன்று சூர்யா, கார்த்தி மற்றும் அவர்களுடன் அகரம் இருக்கிறது.

நடிகர் சிவகுமார்
விட்டில் ஒருவாராவது படிக்க வேண்டும் என்பதற்காக எனது அக்காவின் படிப்பை நிறுத்தி என்னை படிக்க வைத்தார்கள். பள்ளியில் எடுத்த மாணவர்களின் குழு புகைப்படத்தை வாங்க பணம் இல்லை. அதே பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு பிறகு என்னுடன் படித்த மாணவர்கள் சில பேர் மீண்டும் நாங்கள் படித்த பள்ளியில் சந்தித்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டோம். இன்று அந்த பள்ளிக்கு நானும் என்னுடன் படித்த மாணவர்களும் சேர்ந்து, எங்களால் முடிந்த தொகையை வசூலித்து, அரசு செய்த உதவியுடன் சேர்த்து எங்கள் கல்வி அறக்கட்டளையின் மூலமாக ஒரு அரங்கமும், 5 வகுப்பறைகளையும் கட்டிக்கொடுத்தோம். சூர்யா, கார்த்தி அந்த பள்ளிக்கு 500 நாற்காலிகளை நன்கொடை அளித்தனர். அதுதான் நான் எங்கள் பள்ளிக்கு செலுத்திய மரியாதை.
14 வயது வரை 14 படங்களை மட்டுமே பார்த்த நான், 14 வருடங்களில் 100 படங்களை நடித்தேன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து 1980ஆம் ஆண்டு சிவகுமார் கல்வி அறக்கட்டளையை தொடங்கினோம். +2 மாணவர்களுக்கு அந்த காலகட்டத்தில் முதல் பரிசு 1000 ரூபாய், இரண்டாம் பரிசு 750 ரூபாய், மூன்றாம் பரிசு 500 ரூபாய் கொடுத்து வந்தேன். பல படங்களில் சூர்யா நடித்தாலும் அவருக்கு நிலையான பெயர் அகரத்தின் மூலமே கிடைக்கும். அகரம் அறக்கட்டளையே சூர்யாவின் அடையாளம். விவசாயத்திற்கு உதவும் உழவன் பவுண்டேஷனே கார்த்தியின் அடையாளம். மாணவர்கள் அனைவரும் தைரியமாக இருங்கள், நான் உங்களை விட அதிகம் கஷ்டங்களை சந்தித்தவன். ஆனால் இன்று இந்த நிலையில் உள்ளேன். சத்தியமாகவும் நேர்மையாகவும் நீங்கள் உழைத்தால் வெற்றியின் உச்சத்திற்கு செல்வீர்கள் என்றார்.
அகரம் அறக்கட்டளை விழா

நடிகர் சூர்யா பேசுகையில், 'அகரம் அறக்கட்டளையின் இந்த வளர்ச்சிக்கு என் நண்பன் ஞானவேலுவும், ஜெயஶ்ரீ அவர்களும்தான் முக்கிய காரணம். இரவு, பகல் பார்க்காமல் அவர்கள் செலுத்தும் அசுர உழைப்பினால்தான் இன்று அகரம் இந்த 10 ஆண்டுகள் கடந்தும் கம்பீர நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. அகரம் ஒரு குடும்பம், பழைய தலைமுறையினருடன் புதிய தலைமுறையினரும் ஒன்று சேர்ந்து பயணிக்கும் பாதையே அகரம். அகரம் குடும்பத்தில் 3000க்கும் அதிகமான மாணவர்கள் என்பது எளிதான காரியமல்ல, இங்குள்ள அனைவரின் ஒட்டுமொத்த உழைப்பே அகரம். மாணவர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அவர்களின் வாழ்க்கை தரத்தை கல்வி அளிப்பதின் மூலம் மேம்படுத்தி, அவர்களை சரியான பாதையில் பயணிக்க வைப்பது என்பது அகரம் அனைவரின் மூலம் நிகழ்த்தும் சாதனை.

மூன்று விஷயங்கள் என்றுமே நம்மை சுற்றி இருக்கும். நம் குடும்பம், நம் சமூகம், நம் வேலை. இந்த மூன்றிலும் நமக்கு சமநிலை வேண்டும். மூன்றிற்கும் உங்களால் முடிந்த நேரத்தை செலவிடுங்கள். நாம் மற்றவர்களுக்கு பயனுள்ளவர்களாக இருந்தால் நம் வாழ்க்கை முழுமை பெறும் ' என்றார்.

இதையும் படிங்க: 'ராதிகாவிடம் பிடிக்காத விஷயம் இதுதான்' - சரத்குமார் ஓபன் டாக்!

ABOUT THE AUTHOR

...view details