சமீபத்தில் விருது பெரும் நிகழ்ச்சியில் நாம் கோயில்களை அதிகம் செலவு செய்து பராமரிக்கிறோம், உண்டியல்களில் பணத்தைப் போடுகிறோம், அதைப்போல அரசு மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள், அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதற்காகவும் கொடுங்கள் என்று நடிகை ஜோதிகா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஜோதிகா கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் சமூக வலைதளங்களில் அவரை குறித்து சிலர் அவதூறு பரப்பி வந்தனர். அதோடு மட்டுமல்லாமல் அவர் கூறியதை திரித்துக் கூறி, இந்து கோயில்களுக்கு ஜோதிகா நன்கொடை கொடுக்க வேண்டாம் என்று சொன்னதுபோல் வதந்தி பரப்பி வந்தனர். மேலும் அவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்றும் சிலர் வதந்தி பரப்பி வந்தனர்.
சமீபத்தில் ஜோதிகா குறித்து முகநூலில் சிலர் இழிவாகப் பதிவிட்டு வருகின்றனர் எனக் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியிருந்தது.
இதையும் படிங்க... ஜோதிகா குறித்து முகநூலில் இழிவாகப் பதிவு - நடவடிக்கை எடுக்க மாதர் சங்கம் வேண்டுகோள்!
தற்போது இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டும் வகையில் நடிகர் சூர்யா விளக்கம் அளித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஜோதிகா பேசியது சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது என்று தெரிவித்தார்.
இதையடுத்து 'பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் கோவில்களைப் போலவே உயர்வாக கருத வேண்டும். விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்கள் இதே கருத்தை சொல்லியிருக்கிறார்கள். நல்லோர் சிந்தனைகளை படிக்காத, காது கொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. கரோனா தொற்றினால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும் எங்களுக்கு கிடைத்திருக்கும் ஆதரவு மகிழ்ச்சியை அளித்தது.
அறிஞர்கள், ஆன்மீகப் பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம். 'மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம்' என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கு கற்றுத்தர விரும்புகிறோம். சிலர் தரைக்குறைவாக அவதூறு பரப்பும் போது நல்லோர்கள், நண்பர்கள் எங்களுக்கு துணை நிற்கிறார்கள். நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச் செய்கிறார்கள். உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்' என்று அந்த அறிக்கையில் தெரிவித்தார்.
இதையும் படிங்க... பாரதியார் கூறியதைத்தான் ஜோதிகா கூறியுள்ளார்- மேலோங்கும் ஆதரவுக் குரல்கள்!