மலையாளத்தில் சுராஜ் வெஞ்சராமுடு நடிப்பில் இயக்குநர் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25'.
பாசத்திற்காக ஏங்கும் தந்தை வெளிநாட்டில் இருந்து மகன் கொண்டு வரும் ரோபோவுடன் நட்பாகி விடுகிறார். சுவாரஸ்யமான இந்த கதை மலையாளத்தில் வெளியாக, திரையரங்குகளில் பல நாட்கள் ஓடி வசூலை வாரிக்குவித்தது.
இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமைக்கு கடும்போட்டி நிலவி வந்த சூழ்நிலையில், அதன் உரிமையை முன்னணி இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கைப்பற்றினார்.
கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவியாளர்களாகப் பணியாற்றிய சபரி மற்றும் சரவணன் இயக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசயமைக்கிறார். சபரிகிரீசன் இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரின் அண்ணன் மகன் ஆவார்.
'கூகுள் குட்டப்பா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷன், லாஸ்லியா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சூர்யா வெளியிட்டுள்ளார்.
படத்தைப் பற்றி இரட்டை இயக்குநர்கள் பேசுகையில், "மலையாளத்தில் ‘ஆன்ட்ராய்ட் குஞ்சப்பன்’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் யோகி பாபுவின் காமெடியுடன், கிராபிக்ஸ் காட்சிகளுடன் சேர்த்து திரைக்கதையை சுவராசியப்படுத்தியிருக்கிறோம்.
ஆறு வயது முதல் அறுபது வயது வரையுள்ள அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், ஃபேமிலி என்டர்டெய்னராக ‘கூகுள் குட்டப்பா’ உருவாகியுள்ளது. இப்படத்தில் ரோபோ ஒன்று முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறது. அது செய்யும் குறும்புத்தனமான சேட்டைகள் குழந்தைகளையும், இளைஞர்களையும் உற்சாகப்படுத்தும்" என்றனர்.
இதையும் படிங்க: 'கூகுள் குட்டப்பன்' முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!