சாத்தான்குளத்தில் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”அதிகார அத்துமீறல் முடிவுக்கு வர வேண்டும். மன்னிக்க முடியாத குற்றங்களை செய்தவர்களுக்குகூட மரண தண்டனை கூடாது என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன. சாத்தான்குளம் காவல் நிலையத்தில், இரு அப்பாவி உயிர்களைப் பறிக்கும் அளவிற்கு நிகழ்ந்த காவல் துறையினரின் லாக்கப் அத்துமீறல் காவல் துறையின் மாண்பைக் குறைக்கும் செயல். இது ஏதோ ஒரு இடத்தில் தவறுதலாக நடந்த சம்பவம் எனக் கடந்து செல்ல முடியாது.
காவல் துறையினரால் கொடூரமான தாக்குதலுக்கு ஆளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரையும் அரசு மருத்துவர் பரிசோதனை செய்து நலமாக இருப்பதாக சான்று அளித்திருக்கிறார். நீதியை நிலை நாட்ட வேண்டிய மாஜிஸ்ட்ரேட், பாதிக்கப்பட்டவர்களின் நிலையை பரிசோதிக்காமல், இயந்திர கதியில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
சிறையில் நடத்தப்பட வேண்டிய சோதனைகளும் முறையாக நடக்கவில்லை. இத்தகைய 'கடமை மீறல்' செயல்கள், ஒரு குடிமகனின் உரிமையில் நம் அதிகார அமைப்புகள் காட்டும் அலட்சியத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
ஒருவேளை இருவரின் மரணம் நிகழாமல் போயிருந்தால், காவல் துறையினரின் இந்தக் கொடூர தாக்குதல் நம் கவனத்திற்கு வராமலேயே போயிருக்கும். பாதிக்கப்பட்டவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்தாலும், காவல் துறையினரை எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதற்கான வாழும் சாட்சியாகி இருப்பார்கள்.
தங்கள் மரணத்தின் மூலம் தந்தை-மகன் இருவரும் இந்தச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறார்கள். இந்தக் கொடூர மரணத்தில், தங்களுடைய கடமையை செய்யத் தவறிய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவது, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
இதேபோல், தவறு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்கிற நம்பிக்கையை அரசாங்கமும் நீதி அமைப்புகளும் மக்களிடம் உருவாக்க வேண்டும். மாறாக, நமது அதிகார அமைப்புகள் அவநம்பிக்கையையே ஏற்படுத்துகின்றன.
இரண்டு அப்பாவிகளின் மரணத்திற்குப் பிறகும், உடனடியாக எடுக்கப்படுகிற நடவடிக்கை, சம்பந்தப்பட்ட காவல் துறையினரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்வது மட்டுமே. ஆயுதப்படையில் பணியாற்றுவது என்பது, தண்டனை காலப் பணியாக பொது மக்கள் மத்தியில் ஒரு பிம்பத்தை உருவாக்குகிறது.