நடிகர் சூர்யா நடித்துள்ள, 'ஜெய் பீம்' திரைப்படம் தீபாவளி விடுமுறையை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ஃபிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகிறது.
இப்படத்தில் தான் ஏன் முதன்முறையாக வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்தேன் என்பதை சூர்யா விளக்கியுள்ளார். இதுகுறித்து சூர்யா கூறுகையில், "நான் இந்தப் படத்தில் நடிக்க ஆரம்பிப்பதற்கு வெகு நாட்களுக்கு முன்னதாகவே, நீதிபதி சந்துருவைச் சந்தித்தேன். இயக்குநர் த.செ.ஞானவேல் தான் அதற்கு ஏற்பாடு செய்தார். என்னிடம் நீதிபதி சந்துரு பற்றிக் கூறும்போது அவர் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்றனர்.
அவரைப் பற்றிய நிறைய உத்வேகம் தரும் செய்திகளைக் கூறினார். அவர் வழக்கறிஞராக இருந்த காலத்தில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளுக்கு வக்கில் ஃபீஸ் பெற்றதில்லை என்பதைத் தெரிவித்தனர்.
அவரிடம் பேசியும், அவரைப் பற்றி, அவரது இளமைக் கால துடிப்பைப் பற்றி பேசியும், படித்தும் தெரிந்து கொண்டேன். அவருடைய கதை இந்த உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றுசேர வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். நீதிபதி சந்துரு போன்றோர் போற்றுதலுக்கு உரியவர்கள்.