சிவகார்த்திகேயன், எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் திறமை ஒன்றை மட்டும் வைத்து வெள்ளித் திரையில் கதாநாயகனாக ஜோலிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு. தமிழ்த் திரை உலகில் திரை உலக வாரிசுகளின் ஆதிக்கம் நிறைந்த காலகட்டத்தில் தன் திறமையை மட்டும் முதலீடாக்கிச் சாதித்துக் காட்டியவர்தான் இந்த SK எனும் சிவகார்த்திகேயன். இன்று 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு டிவிட்டரில் பல ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மெரினா, மூனு போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களிலும் தன்னை தனியே கவனிக்க வைத்தார். வெள்ளித்திரையில் மார்க்கெட் குறைந்தால் சின்னதிரை பக்கம் நடையைக் கட்டும் வழக்கத்தை மாற்றி சின்னதிரையிலிருந்து வெள்ளித்திரைக்கு மாஸ் எண்ட்ரி கொடுத்தார். நிகழ்ச்சி தொகுப்பாளர், காமெடியன், கதாநாயகன் என அனைத்திலும் அவருக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கியவர்.
போஸ்பாண்டி டூ டாக்டர்
சிவகார்த்திகேயனுக்கு நகைச்சுவை இயல்பாகவே வரும் என்பதற்கு அவரது வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, போன்ற படங்களே சான்று. காமெடியை தாண்டி நம்ம வீட்டுப் பிள்ளையில் ஒரு எமோஷனல் அண்ணனாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். கிராம கதைக்களமானாலும், சிட்டி பாய் சப்ஜெக்ட்டானாலும் வெளுத்து வாங்குவார். எந்த கதாபாத்திரத்திலும் தன்னை கச்சிதமாகப் பொருத்திக்கொள்ளும் திறன் கொண்டவர்.
காமெடி, எமோஷனல், டான்ஸ் எனப் பல விதத்திலும் மக்களை மயக்கிய சிவகார்த்திகேயனின் மாஸ், கிளாஸ் அவதாரம்தான் நெல்சனின் டாக்டர். வழக்கமான சிவகார்த்திகேயனை முற்றிலும் கதாபாத்திரமாக இருந்தது டாக்டர் பட வருண் பாத்திரம். தனக்கு காமெடி மட்டும் தான் வரும் என்பதை முற்றிலும் மாற்றி இப்போது அனைத்து தரப்பட்ட களத்திலும் அட்டகாசமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.