வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் 'மாநாடு'. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3ஆம் தேதி படக்குழுவினர் 'மாநாடு' படத்தின் டீஸரை வெளியிட்டனர். இந்த டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்தப் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு நடைபெற்றது. நீண்ட நாள்களாகக் கிடப்பில் போடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு பல பிரச்னைகளுக்கு மத்தியில் தொடங்கி படப்பிடிப்பு நிறைவுற்றது. அதனைத் தொடர்ந்து மாநாடு படக்குழுவினர் டப்பிங், இசைக்கோர்ப்பு உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ரம்ஜான் வெளியீடாக 'மாநாடு' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்படும் என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்த ட்வீட்டால் ஆர்வமுடன் காத்திருந்த ரசிகர்கள், ரம்ஜான் அன்று பாடல் வெளியாகாததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
தற்போது கரோனா தாக்கத்தில் மக்கள் திணறி வரும் நிலையில், கொண்டாடும் மனநிலையில் யாரும் இல்லை என்றும், எனவே மாநாடு ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடு நிறுத்திவைக்கப்ட்டதாக சுரேஷ் காமாட்சி தெரிவித்தார்.
தற்போது மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஜூன் 21ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளார். மேலும் அன்றைய தினம் ட்விட்டர் ஸ்பேஸில் மாநாடு படக்குழுவினரான இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, பாடலாசிரியர் மதன் கார்கி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இந்த படத்தின் பாடல் உரிமைகளை யுவன் சங்கர் ராஜாவின் U1 நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.