நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் திரையில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் திரைப்படம், 'மாநாடு'. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்பு ஒரு பெரிய ஹிட் கொடுத்துள்ளதால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தில் நடித்து வந்தார். இதுதொடர்பான கிளிம்ப்ஸ் காட்சி வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது.
இந்நிலையில் சிம்புவிற்கு திடீரென நேற்று முன்தினம் (டிசம்பர் 11) காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. காய்ச்சல் என்பதால் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. பின்னர் பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று ஏற்படவில்லை என்றும், வைரஸ் காய்ச்சல் என தெரியவந்தது.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் சிம்பு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டேன் . தற்போது மெதுவாக குணமடைந்து வருகிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. நீங்க இல்லாம நான் இல்ல" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:சிம்பு மருத்துவமனையில் அனுமதி; சோகத்தில் ரசிகர்கள்