தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நடிப்பு கற்க கல்லூரி வேண்டாம் - சிவாஜி போதும்

தமிழ் சினிமாவின் அடையாளமாக காலந்தோறும் போற்றும் ஆளுமைமிக்க கலைஞன் சிவாஜி கணேசன் நினைவு தினம் இன்று. சிவனாகவும், நாரதராகவும், கர்ணனாகவும், கப்பலோட்டிய தமிழனாகவும், கட்டபொம்மனாகவும் நமக்கு காட்சியளித்தவர் சிவாஜி கணேசன்.

நடிப்பு கற்க கல்லூரி வேண்டாம் - சிவாஜி போதும்
நடிப்பு கற்க கல்லூரி வேண்டாம் - சிவாஜி போதும்

By

Published : Jul 21, 2021, 9:27 AM IST

இன்று நடித்துக்கொண்டிருக்கும் எந்த நடிகராக இருந்தாலும் சிவாஜியின் பாதிப்பு ஏதாவது ஒரு காட்சியில் வெளிப்படாமல் இருக்காது.

அவர் வகுத்து தந்த பாதையில்தான் இன்றைய நடிகர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துகிறார்கள். நெருப்பு சுடும் என்பதைப்போல, சிவாஜி என்றால் நடிப்பு, நடிப்பு என்றால் சிவாஜி இதுதான் அவர் வளர்த்த சித்தாந்தம். சினிமாவிற்கு இசையும், மொழியும் இருந்தால் மட்டும் போதாது, சிவாஜி போன்ற அசுர நடிகன் வேண்டும். தத்துவார்த்த பேச்சுக்கள் மூலம் தமிழ் மொழியை ஆழமாகவும், அழகாகவும் உச்சரித்து திரைமொழியில் ரசிகர்களின் சுவாச உணர்வை தூண்டியவர் என்பதே நிதர்சனம்.

சிவாஜி

சிவாஜி பேட்டி

"நடிப்பை கற்கவில்லை, யாரையும் காப்பியடிக்கவில்லை எனது உடை, பாவனை, சிரிப்பு, உச்சரிப்பு அயல்நாட்டு நடிகர்களின் தோற்றம்போல் தெரியலாம். நான் வாழும் இடத்தில் சிலர் வாழ்ந்த கதாப்பாத்திரங்களை பார்த்துக்கொண்டே வளர்ந்தவன். அவர்களை பார்த்த பிரமிப்பும், ரசிப்புத்தன்மையும் மட்டுமே என்னை வளர்த்தெடுத்தது" என்று அவரே சில பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சிவாஜி என்று அழைத்த பெரியார்

அண்ணா எழுதிய 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' என்ற நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக நடித்த இவரது நடிப்பைக் கண்டு வியந்துபோன பெரியார், சிவாஜி என்று அழைத்தார். அன்று பெரியார் உச்சரித்த அந்த பெயர்தான் இன்றுவரை தமிழ் சினிமா வரலாற்றை மறுக்க முடியாத மறைக்க முடியாத பெயராக நிலைத்து நிற்கிறது. அவரது நடிப்பை மிகை நடிப்பு என்று விமரிசிப்பவர்கள்கூட சிவாஜியின் திரையுலக சாதனையை மறுத்து பேசமாட்டார்கள். அவரது வாழ்க்கையை பொறுத்தவரை கலையுலகில் சாதனையாளராகவும், அரசியல் அரங்கில் பிழைக்கத் தெரியாத தோல்வியாளராகவும் அனுதாபத்துடன் மதிப்பிடப்படுகிறார்.

ஓடினாள், ஓடினாள்

தான் நடித்த முதல் படத்தில், என்னப்பா அந்த பையன் வத்தலும் தொத்தலுமா இருக்கான். இவ்ளோ பெரிய கேரக்டரை அந்த பையன் தாங்குவானா" என்று சந்தேகத்துடன் பார்த்த தயாரிப்பாளருக்கு, இவர்தான் அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று நம்பிக்கையோடு சொல்லப்பட்டது. சக்ஸஸ் என்றபடியே திரையுலகில் அறிமுகமாகி, "ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்" என்ற வசனம் ரசிகர்களின் கண்களை குளமாக்கின.

எம்ஜிஆர் - சிவாஜி

திருவிளையாடல்

திருவிளையாடல் படத்தில் கடவுளான ஆதி சிவனாக தோன்றி வீரநடையில், வசனம் பேசி அருள் பாளித்து எளிய மக்களிடம் அன்பு செலுத்தியதும் செவாலியே சிவாஜிதான். தமிழ் மக்களின் சிவனாக காட்சியளித்தது சிவாஜிதான் என மக்கள் நம்பியிருந்தனர்.'பராசக்தி' படத்தில் நாடகத்தன்மை குறைந்து புரட்சி பேசும் நாயகனிடம் பசியும், வறுமையும் வாட்டுகிறது. அனைத்தையும் புரட்டிபோட்ட கலைஞர் கருணாநிதியின் வசனங்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. அதிகாரத்திடம் தட்டி கேட்டால்தான் எல்லாம் கிடைக்கும், அடங்கி போனால் அதிகாரம் நம்மை ஏய்க்கும் என்பதை மக்கள் மனதில் பதிய வைத்த படம் அது.

சும்மா அதிருதில்ல

'சிவாஜி' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூறுவதுபோல் பராசக்தி ஹீரோடா பேர கேட்டா சும்மா அதிருதில்ல.... இந்த வசனம் அன்று மட்டுமல்ல இன்றும் என்றும் அந்தப் பெயர் அதிர்வுகளை ஏற்படுத்தும். தமிழ் சினிமாவை சிவாஜிக்கு முன்பு, சிவாஜிக்கு பின்பு என்றே பிரித்து காட்டலாம். சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வரும் எந்த நடிகராக இருந்தாலும் சிவாஜி போல் நடித்து காட்ட வேண்டும் அல்லது அவர் பேசிய வசனங்களில் ஒன்றை பேசி நடித்து காட்ட வேண்டும்.இதற்காக சில நடிகர்கள் பக்கம் பக்கமாய் வசனங்களை மனப்பாடம் செய்து நடிக்க வருவதை சினிமாவில் பார்த்து ரசித்துகொண்டிருக்கிறோம்.

ரஜினி - சிவாஜி

சிவாஜி ஒரு பல்கலைக்கழகம்

சினிமாவில் நடிப்பின் மொழியை கற்க அலமாரியை அலங்கரிக்கும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருக்கின்றன. நடிப்பை கற்க ஆயிரம் கல்லூரிகள் இருக்கின்றன. சிவாஜி கணேசன் என்றொரு நடிகன் வந்த பிறகு எல்லாம் மாறிவிட்டது. நடிப்புலகில், வசன உச்சரிப்பில் சினம் கொண்ட பார்வையில் சிவாஜியே ஒரு பல்கலைக்கழகமாக உருவெடுக்கிறார்.

இயக்குநர் மகேந்திரன் வேதனை

நடிகர் சிவாஜியை பற்றி பலரும் பலவிதமாக கூறியதுண்டு. சிலர் பிரமிக்கும் வகையில் தங்களது அனுபவங்களை தெரிவித்துள்ளனர். இயக்குநர் மகேந்திரன் தான் எழுதிய நானும் சினிமாவும் என்ற நூலில், "சிவாஜிக்கு தீனி போடும் அளவிற்கு 90களில் வந்த இயக்குநர்கள் எவரும் படம் எடுக்கவில்லை. நண்பர் பாரதிராஜா முயற்சிக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன். ஒரு பொம்மை போல ஆகாவழி படங்களில் நடிக்க வைத்து ஒரு மாபெரும் கலைஞனை அலங்கோலப்படுத்திவிட்டனர்.அவர் நடிப்பை பக்கத்திலிருந்து ரசித்தவன் என்ற முறையில் கூறுகிறேன் நடிக்க வைப்பதாகக் கூறி சிவாஜிக்குள் இருந்த நடிப்பை கொன்று பிணமாக்கிவிட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா - சிவாஜி

நடிப்பு இமயம்

அவரது சமகாலத்தில் நடித்த நடிகர் எம்ஜிஆர் தனக்கென்று தனி வழியை உருவாக்கி கொண்டார். ஆனால், சிவாஜி கண்ணாடி முன் நின்று அழவும், சிரிக்கவும் வைத்தார். பணக்காரனாக நடிக்கும் சிவாஜி வேறொரு படத்தில் ஏழையாக நடித்து மக்களின் யதார்த்தங்களை பதிவு செய்தார். சிகரெட் பிடிப்பதால் உடம்பிற்கு கேடுதான் என்றும் தெரிந்தும் சிகரெட்டை பிடித்து தன்னை ஒரு கெட்டவனாகவும், பின் திருந்தி வாழும் ஒழுக்கமானவும் திரையில் வாழ்ந்து காட்டினார்.

சிவாஜி

சிவாஜியை பற்றி பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம், ரசித்துக்கொண்டே இருக்கலாம், இன்னும் சொல்லப்போனால் அவரை பார்த்துக்கொண்டே இருக்கலாம். அந்த சிரிப்பு முகமும், கதர்சட்டையும் வெந்நிற தாடியும் சிவாஜிக்கே உரித்த அடையாளத்தை பதிவு செய்கிறது. நடிப்பில் சிவாஜி போல் ஒருத்தன் பிறந்து வரவேண்டும் என்று பாமரனையும் சொல்ல வைத்த அந்த அதிசயம் 21ஆம் நூற்றாண்டு வரை தொடர்கிறது.

குறிப்பு - இந்த கட்டுரை ஏற்கனவே வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :சின்ன தளபதி பரத்!

ABOUT THE AUTHOR

...view details