சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான 'சார்பட்டா' திரைப்படத்தில் வரும் முக்கியக் கதாபாத்திரங்களுள் ஒன்று 'டான்ஸிங் ரோஸ்'. இத்திரைப்படத்தைக் கண்ட அனைத்து தரப்பினர் மனதிலும் ஆழத் தடம் பதித்துச் சென்றிருக்கிறது 'டான்ஸிங் ரோஸ்' கதாபாத்திரம்.
வடசென்னை வட்டார வழக்கு, அசராத உடல்மொழி, திமிரான நடவடிக்கை என இமைகொட்ட விடாமல் திரைப்படத்தைக் காண வைக்கிறது இந்த கதாபாத்திரம்.
முற்றிலும் முரண்
'டான்ஸிங் ரோஸ்' கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்து, காண்போர் மனதை கொள்ளையடித்துச் சென்ற ஷபீர் கல்லரக்கல்லின் நிஜ வாழ்க்கை, இதற்கு முற்றிலும் முரணானது.
நிஜ வாழ்க்கையில் மிளிரும் ஷபீரின் தன்னம்பிக்கையும், லட்சியமும் மட்டும் படத்திலும் அச்சுப்பிசகாமல் செதுக்கப்பட்டுள்ளது. ஷபீர் திரைத்துறைக்கு புதிதானவர் அல்ல, 2014ஆம் ஆண்டில் வெளியான "நெருங்கி வா முத்தமிடாதே" படம் மூலம் திரைத்துறையில் பிரவேசித்தார்.
2016ஆம் ஆண்டு வெளியான 54321 படத்தில் நடித்து, தன் திறமையை உலகறியச் செய்தார். தொடர்ந்து பேட்ட, டெடி, அடங்கமறு உள்ளிட்ட திரைப்படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். தற்போது டான்ஸிங் ரோஸாக, திரை பயணத்தின் அடுத்த கட்டத்தை எட்டிப் பிடித்துவிட்டார்.
திரும்பும் திசையெல்லாம் டான்ஸிங் ரோஸ்
இணையம் முழுவதும் யூடியூபர்களால் மெருகேற்றி பதிவிடப்பட்ட டான்ஸிங் ரோஸ் காணொலிகள் நிரம்பி வழிகின்றன. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் டான்ஸிங் ரோஸ் காணொலிகளை வைக்காதவர்களை விரல்விட்டே எண்ணிவிடலாம்.
திரும்பும் திசையெல்லாம் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திர புகழ் காட்டுத்தீயாய் பற்றி எரிகிறது.
இந்த அத்தனை புகழையும் கொண்டாடித் தீர்க்க வேண்டிய ஷபீரோ, அமைதி தோய்ந்த முகத்துடன், அனைத்து புகழும் இயக்குநர் பா. ரஞ்சித்தையே சாரும் என விரல்சுட்டிக்காட்டி தன்னடக்கத்தால் மேலும் மிளிர்கிறார்.
ரோஸ் உருவாகக் காரணம் நசீம் ஹமீத்
இதுகுறித்து பேசிய ஷபீர், "இயக்குநர் பா. ரஞ்சித், இந்த கதாபாத்திரத்திற்கு என்னைத் தேர்ந்தெடுக்காமல் இருந்திருந்தால், இத்தனை புகழும் எனக்கு எட்டாக்கனியாகவே இருந்திருக்கும். படத்தில் வரும் ஒவ்வொரு பாக்ஸர் கதாபாத்திரமும், தனி ஸ்டைலுடன் நிஜத்தில் வாழ்ந்த புகழ் மிகு பாக்ஸர்களை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டது.
ஆர்யாவின் கபிலன் பாத்திரம் 'முகம்மது அலி'யை மையப்படுத்தியது, மைக் டைசனுக்கான அர்ப்பணிப்புடன் உருவாக்கப்பட்டதுதான் வேம்புலி பாத்திரம். என்னுடைய டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரம், இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்மிகு பாக்ஸர் நசீம் ஹமீத்தை மையப்படுத்தியே உருவானது.