நடிகர் சிவக்குமார் மகன் எனும் அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் சூர்யா. தொடக்கத்தில் அவரது படங்கள் தோல்வியையே சந்தித்தாலும், அதில் வீழ்ந்து விடாமல் கடும் உழைப்பால் தனக்கென ஒரு இடத்தை தற்போது பெற்றிருக்கிறார். இதுமட்டுமின்றி அகரம் பவுண்டேசன் என்னும் அமைப்பை தொடங்கி, ஏழ்மையான மாணவர்களை படிக்க வைத்து வருகிறார். இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கை குறித்து அவர் பேசிய கருத்து, தமிழ்நாட்டில் பெரும் விவாவத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நடிகர் சூர்யா இன்று தனது 44ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதில், சூர்யாவிற்கு வாழ்த்துகள் கூறி நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், "பிறந்தநாள் வாழ்த்துகள் சூர்யா. நீ ஒரு வயசு குழந்தையாக இருக்கும்வரை உன்ன தூக்கி கொஞ்சி இருக்கேன். பல பிறந்தநாளுக்கு ஃபோன் மற்றும் வாட்ஸ் அப் மூலமாக வாழ்த்து கூறியிருக்கிறேன். ஆனால் இம்முறை சமூக வலைதளம் மூலமாக வாழ்த்துக் கூறுகிறேன். இந்த பிறந்தநாளில் உன்னை பார்த்து பெருமைப்படுகிறேன். ஏன்னா... சமூக நீதிக்காக நீ கொடுத்த குரல் வரவேற்கத்தக்கது. சராசரி மனுசனுக்கு இருக்கிற பொதுவான குணம், நமக்கு ஏன் வம்பு அப்படியிருக்கிறதுதான். ஆனால், வளர்ந்து பெருசா சம்பாதிட்டா, நமக்கேன் வம்பு என்கிறது அதிகமாகிடும்.
சமூகத்துக்காக குரல் கொடுக்கிறவர்களோடு, நானும் ஓரமாய் நின்று போராட்டங்களில் பங்கெடுத்துக்கிறேன். ஆனா... தமிழ் சினிமாவில பிரபல மாஸ் ஹீரோவாக இருந்து விட்டு சமூகத்துக்காக குரல் கொடுப்பது அவ்வளவு எளிதல்ல. இதனால பல எதிர்ப்பு, கஷ்டம், இழப்பு, சங்கடங்களை சந்திக்க வேண்டிவரும். அதை அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். ஆனா, சமூக நீதிக்காக, கல்விக்காக நீ குரல் கொடுத்திருக்கிறாய். நான் பெருமையாய் நினைக்கிறேன். ஏதோ நுனிப்புல் மேய்வது மாதிரி மோலோட்டமாக சொல்லாமல், அந்த விசயத்தை ஆழமாக அலசி ஆராய்ந்து கருத்தை பதிவு செய்திருக்கிறாய். உன்னைவிட வயதில் பெரியவன் என்பதால் வாழ்த்துகிறேன். உனது துணிச்சலை வணங்குகிறேன்" என தெரிவித்துள்ளார்.