சினிமாவில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்திலாவது நடிக்க வேண்டும் என்பது தான் இன்றைக்கும் பலரின் கனவாக உள்ளது. அப்படிபட்ட ஆசை தான் கோவை மாவட்டத்தில் பிறந்த சத்யராஜூக்கும் தோன்றியது. எம்.ஜி.ஆரை பார்த்து நடிப்பில் ஆர்வம் கொண்ட இவருக்கு தமிழ் சினிமாவில் 1978ஆம் ஆண்டு ’சட்டம் என் கையில்’ திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசனுக்கு அடியால் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
எப்படியாவது திரைத்துறையில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். அறிமுகமான முதல் படத்திலேயே தனது வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார். அதைத்தொடர்ந்து ஒரு சில படங்களில் அடியால் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சத்யராஜ், அடுத்ததாக 1984ஆம் ஆண்டு இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான ’நூறாவது நாள்’ படத்தில் வில்லனாக அவதாரமெடுத்தார்.
மொட்டை தலை, கருப்பு கண்ணாடி என்று முழு வில்லனாக அப்படத்தில் நடித்து அசத்தியிருப்பார். அதிலும் குறிப்பாக, அப்படத்தில் நளினியை கொலை செய்யும் போது ரத்தவெறி அவரது முகத்தில் காண்பித்து, இவர்தான் அடுத்த சில ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத வில்லன் என்று மக்களை சொல்ல வைத்தார்.
ஆனால் எம்.ஜி.ஆர் போன்று தான் கதாநாயகன் ஆக வேண்டும் என்ற ஆசை இவரை துரத்தவே, தனது கனவை நோக்கி ஓட ஆரம்பித்தார். சத்யராஜின் நடிப்பை பார்த்து வியந்த பாரதிராஜா அவருக்கு 1986ஆம் ஆண்டு தனது ’கடலோர கவிதைகள்’ படம் மூலம் ஹீராவாக அறிமுகப்படுத்தினார். அத்தனை ஆண்டுகளாக வில்லனாக பார்த்த சத்யராஜை அந்த படத்தில் மக்கள் மிகவும் சாதுவான கதா பாத்திரத்தில் மக்கள் வெகுவாக ரசித்து பார்த்தனர்.
தொடர்ந்து ’சின்னதம்பி பெரியதம்பி’, 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’, 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ என்று ஹீராவாக தனது நடிப்பு திறைமையை வெளிக்காட்டி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார் சத்யராஜ்.
”மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும் மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்” என்று இந்த பாடல் வரியே படத்தின் கதையை சொல்லும். ’ஒன்பது ரூபாய் நோட்டு' படத்தின் தலைப்பிலேயே தெரிந்துவிடும் சத்யராஜ் இந்தப் படத்தில் செல்லக்காசு என்று. அப்பாவியான முகம் கொண்ட விவசாயி கதா பாத்திரத்தில் படம் முழுவதும் தோன்றி அவர் வெளிப்படுத்திய அசுரத்தனமான நடிப்பு, அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டது.