த.செ. ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' திரைப்படம் இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றியடைந்தது.
இதனையடுத்து படத்தில் நடித்த ஒவ்வொருவரும் கவனம் பெற்றிருக்கின்றனர். அதில் மக்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாமல் திரையில் பிரமிப்பைப் புகுத்தியவர், அட்டர்னி ஜெனரலாக வந்த ராவ் ரமேஷ்.
அவரது பேச்சு, உடல்மொழி என அனைத்துமே பண்பட்ட நடிகரை உணர்த்தியது. இவர் தெலுங்கில் அனைத்து முன்னணி ஹீரோக்களின் நடிப்பில் வெளியான படங்களில் பலதரப்பட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவரது அசாதாரண நடிப்பாற்றலைக் கண்டே 'ஜெய் பீம்' பட இயக்குநர் த.செ.ஞானவேல் தேர்வு செய்திருக்கிறார்.
இத்திரைப்படத்தில் நடித்தது குறித்து ராவ் ரமேஷ் பேசியதாவது:
"நான்தான் அந்த வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பேன் என என்னைக் கேட்டதில் எனக்கு ஆச்சரியமான சந்தோஷம். இயக்குநர் ஞானவேல் என்னைக் கேட்டதும், அதை சூர்யா ஒத்துக்கொண்டதும் என் நன்றிக்குரிய விஷயங்கள்.
ஆனால், நான் அதில் நடிக்க ஒரு அன்பான கண்டிஷன் போட்டேன். நான் நடித்தால் அதற்கு நான்தான் டப்பிங் பேசுவேன் என்பதுதான் அந்த கண்டிஷன்.
எந்த கேரக்டராக, மொழியாக இருந்தாலும் அதில் நாமே நடித்து நம் மாடுலேஷனில் பேசினால்தான் அதற்கு ஜீவன் இருக்கும். அந்த கேரக்டர் மேம்படும் என்ற கருத்து கொண்டவன் நான்.
அதனால்தான் அப்படிக் கேட்டேன். அதற்கு அவர் ஒத்துக்கொண்டதும் மகிழ்ச்சியுடன் நடித்தேன். அது மட்டுமல்லாமல் தமிழ் ஒரு அழகான மொழி. அதனால்தான் தமிழ்நாட்டுக்கு வந்து வாழும் எந்த மாநிலத்தவராக இருந்தாலும் தமிழிலேயே பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.
தெலுங்கு நடிகரான உங்களால் எப்படி சுத்தமாக தமிழ் பேசி நடிக்க முடிந்தது?
நான் வளர்ந்தது முழுக்க சென்னையில்தான். தியாகராய நகர் ராமகிருஷ்ணாவில்தான் பள்ளிக்கல்வி படித்தேன். அதனால் பிறமொழிக் கலப்பு இல்லாமல் சுத்தமாகவும் தமிழ் பேச முடியும்.
தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளிலும் படம் வெளியானதில் அத்தனை மொழி பேசுபவர்களும் பார்த்து, ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களே பாராட்டுவதுபோல் இருக்கிறது.
ரசிகர்கள் என்றில்லாமல் பல துறையைச் சேர்ந்தவர்களும், குறிப்பாக சட்டத்துறை நிபுணர்களும் அட்டர்னி ஜெனரல் என்றால் இப்படித்தான் இருப்பார்கள். எப்படி, உங்களால் அப்படி நடிக்க முடிந்தது என கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
அதற்குக் காரணம் முழுக்க இயக்குநர் ஞானவேல் தான். அவர்தான் என் கேரக்டரை அணு அணுவாக என்னுள் ஏற்றினார். எவ்வளவு சிரிக்க வேண்டும், எவ்வளவு கோபம் வேண்டும் என்றெல்லாம் அந்த ஸ்கேல் மாறாமல் என்னிடம் நடிப்பை வாங்கினார்.
ஏனென்றால், அந்தக் கேரக்டர் சூர்யாவுக்கு எதிரானவரே தவிர, வில்லன் இல்லை. உண்மையில் பொறுப்புள்ள அலுவலர். அவர் பொறுப்பை நிறைவாக செய்ய வேண்டும்.
அவரை நம்பிதான் ஒட்டுமொத்தக் காவல்துறையின் கௌரவம் காக்கப்பட இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அரசுக்கும் களங்கம் வராமல் அந்த வழக்கை வழி நடத்த வேண்டும். அந்தப் பொறுப்பு அவர் பேசுவதில் இருந்தே வெளிப்பட வேண்டும். அவர் நடத்தையில் தெரிய வேண்டும்.
'நான்தான் இன்னைக்கு ஆஜர் ஆகறேன்னு ஜட்ஜ்கிட்ட சொன்னீங்களா?' எனக் கேட்டு, நான் நீதிமன்றத்துக்குள் நுழைய, அத்தனை வழக்கறிஞர்களும் எழுந்து வணக்கம் சொல்வதும், ஜட்ஜே நலம் விசாரிப்பதுமான காட்சி அந்தப் பாத்திரத்தின் மேன்மையை அப்படியே சொன்னது. படம் பார்த்த அனைவருமே அந்த நடிப்பில் என்னைப் பாராட்டினார்கள்.
அப்படி ஒரு காட்சியை அமைத்த இயக்குநருக்குத்தான் அத்தனைப் பாராட்டுகளும் போய்ச்சேர வேண்டும். அதனால்தான் அந்த கேரக்டரில் நடிக்கும்போது, பாடி லாங்குவேஜ் தானாகவே எனக்கு வந்தது.