சென்னை: அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எடுத்திருக்கும் முடிவு 100 சதவீதம் சரிதான் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டரில், "குருவே நீங்கள் எடுத்திருக்கும் முடிவு 100 சதவீதம் சரிதான். வேறு எதைக் காட்டிலும் எங்களுக்கு உங்களது உடல்நலம் மிகவும் முக்கியம்.
உங்களை நம்பியிருக்கும் மக்கள் மீது அக்கறை வைத்து சுயநலமற்ற முடிவை எடுத்துள்ளீர்கள். நீங்கள் எப்போதும் மற்றவர்களின் நலம் மீதே அக்கறை கொண்டவராக இருப்பதால்தான் பெரிய இடத்தில் உள்ளீர்கள்.
உடல்நலம் பெற வேண்டி ராகவேந்திர சுவாமியை தரிசனம் செய்கிறேன். குருவே சரணம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இம் மாத இறுதியில் அரசியல் கட்சி குறித்து அறிவிப்பை வெளியிடுவதாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சியினர் மத்தியிலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
கட்சி அறிவிப்புக்கு முன்னர் தான் ஒப்புக்கொண்ட அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முடிக்க முடிவு செய்த ரஜினி, ஹைதராபாத்தில் நடைபெற்ற படத்தின் படப்பிடிப்பில் சுமார் 14 மணிநேரம் வரை இடைவிடாது பணியாற்றினார்.