எந்தக் கதாபாத்திம் கொடுத்தாலும் அதில் கச்சிதமாக நடிப்பவர் பிரசன்னா. தற்போதுவரை இமேஜ் வளையத்திற்குள் சிக்காமல் நாயகன், வில்லன், நாயகனின் நண்பன் எனக் கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி நடித்த அனைத்துப் படங்களிலுமே வாகை சூடிவருகிறார்.
இவர் மணிரத்னம் தயாரிப்பில் வெளியான 'ஃபைவ் ஸ்டார்' படத்தின் மூலம் அறிமுகமாகி, விமர்சகர்களிடம் பல பாராட்டுகளைப் பெற்றார். இதனையடுத்து இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் வெளியான 'அழகிய தீயே' படத்தில் நடித்தார். இந்தப் படம் இவரது திரைப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
பிறகு, 'கண்ட நாள் முதல்', 'சீனா தானா 001', 'சாது மிரண்டா' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். நாயகனாக வளர்ந்துவந்த இவர், அஞ்சாதே படத்தின் மூலம் வில்லனாக மிரட்டினார். பிறகு, 'கல்யாண சமையல் சாதம்' திரைப்படத்தில் ஆண்மைக் குறைபாடுடைய நபராக நடித்திருந்தார்.
பிரசன்னா-சினேகா முதல் முறையாக இணைந்த படம், 'அச்சமுண்டு அச்சமுண்டு'. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்து வெளிப்படையாகப் பேசப்பட்ட இப்படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.