ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களைக் கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.
இந்திய நடிகர்கள் பலருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இந்தி நடிகர்கள் சஞ்சய்தத், ஷாருக்கான், நடிகை ஊர்வசி ரவுடாலா, மீரா ஜாஸ்மின், மலையாள நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர்.
இந்நிலையில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான பார்த்திபனுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு துபாயில் கோல்டன் விசா வழங்கியுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "Golden visa-இன்று துபாயில் எனக்கு வழங்கப்பட்டது. இந்த கௌரவத்தை பெறும் முதல் தமிழ் நடிகர் நான் என்பதாக அதை பெற்றுத் தர முயற்சி எடுத்த ஜுமா அல்மேரி குழுமத்திற்கு நன்றி.
துபாய் அரசாங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த சிறப்புரிமைக்குத் தகுதியானவன் என்று என்னை கருதியதற்காக துபாய் அரசுக்கு அன்பும் நன்றியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.