நாட்டுப்புற பாடகியும், திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடிந்தவருமான பரவை முனியம்மா (77) காலமானார்.
2003ஆம் ஆண்டு வெளிவந்த ’தூள்’ படத்தில் அறிமுகமான இவர், அப்படத்தில் இடம்பெற்ற 'சிங்கம் போல' பாடல் மூலம் பிரபலமடைந்தார்.
கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு பிரச்னை காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், மதுரை மாவட்டம் பரவையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை 3.10 மணியளவில் காலமானார். இவரது மறைவிற்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ள பரவை முனியம்மா, தூள், சண்டை, காதல் சடுகுடு, தோரணை, தமிழ்ப் படம், மான் கராத்தே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான மேடை நிகழ்ச்சிகளில், கிராமிய பாடல்களை பாடி மக்களை மகிழ்வித்துள்ளார்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுப்புற பாடல்களை பாடி வந்த அவர், கிராமத்து வாசனை, குறவன் குறத்தி ஆட்டம், அழிந்த நகரான தனுஷ்கோடியின் கதை, மணிக்குறவன் கதை, கரிமேடு கருவாயன் கதை போன்ற மியூசிக் ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.
இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெற உள்ளது.
இதையும் படிங்க:நா.முத்துக்குமார் முதல் சேதுராமன்வரை- தமிழ் சினிமாவில் ஏற்பட்ட எதிர்பாரா மரணங்கள்