மலையாளத்தில் 2015ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான 'பிரேமம்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படமானது மலையாள ரசிகர்களை மட்டும் கவராமல் தமிழ், தெலுங்கு, கன்னட ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இந்தப் படம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
'பிரமேம்' படம் ஆரம்பம் முதல் க்ளைமேக்ஸ் வரை காட்சிகள் முழுவதும் காதல் மழை பெய்து கொண்டே இருக்கும். பள்ளிப் பருவ பையானாக வரும் ஜார்ஜ் (நிவின் பாலி), மேரி (அனுபமா பரமேஸ்வரன்) பின்னால் சுற்றுவது, கல்லூரி பருவ காலத்தில் தெனாவட்டுடனும் நண்பர்களுடன் லூட்டி அடித்து சுற்றும் ஜார்ஜ், மலர் (சாய் பல்லவி) டீச்சரை பார்த்து காதல் வயப்படுவது, இறுதியாக வாழ்க்கையின் எதார்தத்தை புரிந்து கொண்டு பேக்கரி கடை உரிமையாளரான ஜார்ஜ், செலினை (மடோனா செபாஸ்டியன்) திருமணம் செய்து கொள்ளவது என நிவின் பாலி படம் முழுவதும் மாற்றங்களைக் கொடுத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.