மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இதில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் பாடல்கள், டீசர்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் திரையரங்குகளில் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியானது.
அது வெறும் நடிப்பு திட்டாதீங்கப்பா முடியல: 'கண்ணபிரான்' நட்டி - கர்ணன் திரைப்பட விமர்சனம்
'கர்ணன்' படத்தில் கண்ணபிரானாக நடித்துதான் இருக்கிறேன் யாரும் என்ன திட்டாதீங்கய்யா என்று நடிகர் நட்டி என்கிற நடராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் வெளியாகியுள்ள கர்ணன் படத்தைப் பார்த்த இணையவாசிகள், பிரபலங்கள், அரசு உயர் அலுவலர்கள் என பலர் படத்தை வெகுவாகப் பாராட்டி சமூகவலைதளங்களில் தங்களது கருத்தைப் பகிர்ந்துவருகின்றனர். இந்த படத்தில் போலீஸ் அலுவலராக கண்ணபிரான் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய நட்டி (எ) நடராஜுக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன. ஒருபுறம் கொடூர வில்லனாக நடித்த இவரது நடிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் வசைபாடிவருகின்றனர். ஒரு சிலர் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு திட்டி தீர்த்து வருகின்றனர்.
அந்த அளவுக்கு இந்த காதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தன்னை தயவு செய்து யாரும் திட்ட வேண்டாம் என நட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். அந்த ட்வீட்டில், என்ன திட்டாதீங்க எப்போவ்.. ஆத்தோவ்.. அண்ணோவ்... கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன்.. phone...messagela.. திட்டாதீங்கப்பா.. முடியிலப்பா.. அது வெறும் நடிப்புப்பா.. ரசிகர்களுக்கு எனது நன்றி என பதிவிட்டுள்ளார்.