சென்னை: நடிகர் மாதவன் கரோனா ஊரடங்கால் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் நுழையும் ஆசையுடன் இருந்த மாதவனை, சந்தோஷ் சிவன், இயக்குநர் மணிரத்னத்திடம் அறிமுகம் செய்தார். ஆனால், மாதவனைப் பார்த்த மணிரத்னம், தனது படத்திற்கு இவர் சரியாக இருக்க மாட்டார் என நிராகரித்துவிட்டார்.
இதனையடுத்து மாதவனை நிராகரித்த மணிரத்னமே அவரை 2000ஆம் ஆண்டு தமிழில், 'அலைபாயுதே' படம் மூலம் அறிமுகம் செய்துவைத்தார். கிடைத்த முதல் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மாதவன், 'கார்த்தி' கதாபாத்திரத்தின் மூலம் பெண்களின் மனதில் இடம் பிடித்தார். கலர் கண்ணாடி..... கூலான ஆட்டியூட்... என தனது முழு நடிப்பையும் காண்பித்து அசத்தியிருப்பார்.
மணிரத்னமே நினைத்தால் கூட மறுபடியும் இன்னொரு கார்த்தியைக் காண்பிக்க முடியாது. அந்த அளவிற்கு அத்திரைப்படம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டது.
'கன்னத்தில் முத்தமிட்டால்' திருச்செல்வன் கதாபாத்திரத்தில் மாதவன் தனது முதல் படத்திலேயே இளம் பெண்களின் மனங்களைக் கவர்ந்த மாதவன் தொடர்ச்சியாக, 'மின்னலே', 'டும் டும் டும்', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'அன்பே சிவம்' உள்ளிட்ட நல்ல கதையம்சங்கள் கொண்ட படத்தில் நடித்து அனைவரையும் ஈர்த்தார். மேலும் அவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள, 'ராக்கெட்ரி- தி நம்பி எபெக்ட்' திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராக உள்ளது.
இந்நிலையில் நடிகர் மாதவன் இன்று (ஜுன்.01) தனது 51ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி சமூக வலைத்தளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இம்முறை கரோனா ஊரடங்கு காரணமாக, அவர் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாட இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.